கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ராட்சத அலைகள் எழுந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சம்


கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ராட்சத அலைகள் எழுந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சம்
x
தினத்தந்தி 3 May 2017 11:15 PM GMT (Updated: 3 May 2017 9:12 PM GMT)

கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்ததால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படும். இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதில் சிரமம் ஏற்படும். மேலும், கடல்நீர் மீனவ கிராமங்களில் புகுந்துவிடும் சூழ்நிலையும் உருவாகும்.

இந்த ஆண்டு மே மாதமே கடலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

கன்னியாகுமரியில்...

கன்னியாகுமரியில் நேற்று கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. முக்கடல் சங்கம கடற்கரையில் எழுந்த ராட்சத அலைகள் அங்குள்ள பாறைகளில் மோதி சிதறியது. மேலும், அலைகள் வேகமாக கரையை நோக்கி பாய்ந்து வந்ததால், கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விசில் ஊதிய வண்ணம் சுற்றுலா பயணிகளை கடலில் குளிக்க வேண்டாம் என எச்சரித்தனர்.

வெயிலின் தாக்கம் குறைந்தது

அதேசமயம் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடர்ந்து நடந்தது. நீண்ட வரிசையில் நின்று சுற்றுலா பணிகள் படகு சவாரி செய்தனர்.

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்தது. ஆனால், நேற்று காலை முதலே வானம் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான காற்று வீசியது.

கோவளம்

கோவளத்திலும் நேற்று கடலில் ராட்சத அலைகள் எழுந்தன. பனைமரம் உயரத்திற்கு எழுந்த ராட்சத அலைகள் அங்குள்ள தூண்டில் வளைவுகளில் மோதியது. இதனால் தூண்டில் வளைவுகளில் ஆங்காங்கே சிறு சிறு சேதம் ஏற்பட்டது.

இதுபோல், ராஜாக்கமங்கலம் துறையில் நேற்று முன்தினம் மாலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையை நோக்கி சீறி பாய்ந்ததால் கரையோர மக்கள் பீதியுடன் காணப்பட்டனர்.


Related Tags :
Next Story