விராஜ்பேட்டை அருகே காலில் படுகாயத்துடன் அவதிப்பட்ட பெண் காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை


விராஜ்பேட்டை அருகே காலில் படுகாயத்துடன் அவதிப்பட்ட பெண் காட்டு யானைக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 9 Jun 2017 9:00 PM GMT (Updated: 2017-06-10T01:01:33+05:30)

விராஜ்பேட்டை அருகே காலில் படுகாயத்துடன் அவதிப்பட்டு வந்த பெண் காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

குடகு,

விராஜ்பேட்டை அருகே காலில் படுகாயத்துடன் அவதிப்பட்டு வந்த பெண் காட்டு யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 2 நாளில் மால்தாரே வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

பெண் காட்டு யானைக்கு காலில் படுகாயம்

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகாவில் உள்ளது பாலலே கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஒரு பெண் காட்டு யானை காலில் படுகாயத்துடன் சுற்றித்திரிந்தது. இதுபற்றி அந்தப் பகுதி பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து சென்று, அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முயன்றனர்.

ஆனால் அந்த யானை, வனத்துறையினரை அருகே வரவிடவில்லை. இதனால் அந்த யானையின் காலில் இருந்த காயம் ஆறாமல் தீவிரமானது. அதில் புழுக்கள் வைத்துவிட்டன. இதனால் நடக்க முடியாமல் அந்த யானை அவதிப்பட்டு வந்தது. கடந்த வாரம் பாலலே கிராமத்தை ஒட்டிய குட்டையில் தண்ணீர் குடிக்க வந்த அந்த பெண் காட்டு யானை, குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் அவதிப்பட்டது.

‘கும்கி‘ யானைகள் உதவியுடன் மீட்டு சிகிச்சை

இதுபற்றி தகவல் அறிந்த அந்தப் பகுதி மக்கள், வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதைதொடர்ந்து குட்டையில் கிடந்த யானையை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். அதற்காக மத்திக்கோடு யானை முகாமில் இருந்து ‘கும்கி‘ பயிற்சி பெற்ற கோபாலகிருஷ்ணா, துரோனா, பீமா, அபிமன்யூ, கிருஷ்ணா ஆகிய 5 யானைகள் நேற்று அங்கு வரவழைக்கப்பட்டன. மேலும் கால்நடை மருத்துவர் உமாசங்கர் அங்கு வரவழைக்கப்பட்டார். கயிறுகள் கட்டி 5 ‘கும்கி‘ யானைகளும், காலில் காயத்துடன் அவதிப்பட்ட யானையை குட்டையில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் காயமடைந்துள்ள யானை முரண்டு பிடித்தது.

இதைதொடர்ந்து வனத்துறையினர், கால்நடை மருத்துவர் உமாசங்கர், காயமடைந்த யானைக்கு மயக்க மருந்து செலுத்த முடிவு செய்தனர். அதன்படி மயக்க மருந்து ஊசி மூலம் காயமடைந்த யானையின் உடலில் செலுத்தப்பட்டது. இதனால் சிறிது நேரத்தில் அந்த யானை மயக்கம் போட்டது. அதைதொடர்ந்து கயிறு கட்டி அந்த யானை, ‘கும்கி‘ யானைகள் உதவியுடன் குட்டையில் இருந்து வெளியே எடுத்துவரப்பட்டது.

பின்னர் அந்தப் பகுதியில் வைத்தே, யானையின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் உமாசங்கர் சிகிச்சை அளித்தார். மேலும் காலில் ஏற்பட்ட காயத்தால் சாப்பிடாமல் இருந்ததால் அந்த யானை சோர்வாக காணப்பட்டது. இதனால் அந்த யானைக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. மேலும் தொடர்ந்து அந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

2 நாளில் வனப்பகுதியில் விடப்படும்

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:–

பெண் காட்டு யானைக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் நடக்க முடியவில்லை. இதனால் குட்டையில் இருந்து அந்த யானை வெளியே வர முடியாமல் அவதிப்பட்டது. தற்போது அந்த யானையை, கும்கிகள் உதவியுடன் மீட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்.

இன்னும் 2 நாளில் காயத்தின் தீவிரம் குறைந்துவிடும். அதன்பின்னர் அந்த யானையை மால்தாரே வனப்பகுதியில் விட முடிவு செய்துள்ளோம். அதுவரை அந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். இந்த யானை 40 வயது நிரம்பியது. அதற்கு எப்படி காயம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில் அந்த யானை காயமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story