புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2017 10:15 PM GMT (Updated: 21 Jun 2017 5:09 PM GMT)

சேலம் பெரியமோட்டூரில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சூரமங்கலம்,

சேலம் மாமாங்கம் அருகே பெரியமோட்டூரில் குடியிருப்புகள் மத்தியில் நேற்று முன்தினம் புதிதாக மதுக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இது பற்றிய தகவல் அறிந்த மதுப்பிரியர்கள் உடனடியாக அங்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால் மது விற்பனை ஜோராக நடந்தது. மேலும், சிலர் மதுக்கடை அருகிலேயே தனியாருக்கு சொந்தமான குடிசையில் வைத்து மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. குடியிருப்புகள் மத்தியில் மதுக்கடை திறக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி பெண்கள் திடீரென அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில், பெரியமோட்டூரில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை புதிதாக திறக்கப்பட்ட அந்த மதுக்கடையை மூடக்கோரி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீஸ் உதவி கமி‌ஷனர் செல்வராஜ், சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூடுவதற்கு நடவடிக்கை

அப்போது, போலீசாரிடம் சிலர், புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடை அருகில் அதிகளவில் குடியிருப்புகள் மற்றும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி இருக்கிறது. இதனால் பெண்கள், பள்ளி மாணவ–மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்றும், எனவே, இந்த மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அனைவரும் பெரியமோட்டூரில் மதுக்கடை வேண்டாம் என்று ஒரு பேப்பரில் கையெழுத்து போட்டு அதை போலீசாரிடம் கொடுத்தனர்.

இதையடுத்து புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுக்கடையை மூடுவதற்கு டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எனவே, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறும் பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதனால் சமாதானம் அடைந்த ஆண்களும், பெண்களும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story