லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க கோரி யாரும் என்னிடம் மனு கொடுக்கவில்லை


லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க கோரி யாரும் என்னிடம் மனு கொடுக்கவில்லை
x
தினத்தந்தி 26 July 2017 10:09 PM GMT (Updated: 26 July 2017 10:09 PM GMT)

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க கோரி யாரும் என்னிடம் மனு கொடுக்கவில்லை என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் குரல் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த சித்தராமையா, லிங்காயத் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கோரிக்கை விடுத்தால் அதற்கு ஆதரவு அளிப்பேன் என்று கூறினார். சித்தராமையாவின் இந்த கருத்துக்கு மந்திரிசபையில் உள்ள லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மந்திரிகளும் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர்.

இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள லிங்காயத் சமூக தலைவர்கள், மடாதிபதிகளின் கருத்துகளை கேட்க 5 மந்திரிகள் அடங்கிய ஒரு குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதில் மந்திரிகள் எம்.பி.பட்டீல், பசவராஜ் ராயரெட்டி, எஸ்.எஸ்.மல்லிகார்ஜுன், சரணபிரகாஷ் பட்டீல், வினய்குல்கர்னி ஆகியோர் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்பட்டது.

லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க கோருவதற்கு அதே சமூகத்தை சேர்ந்த கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். லிங்காயத் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த சித்தராமையா முயற்சி செய்வதாக அவர் குற்றம்சாட்டினார். ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர் குமாரசாமியும் சித்தராமையாவுக்கு எதிராக பேசியுள்ளார்.

முதல்–மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று பேட்டி அளிக்கையில், “கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அறிவிக்க கோரி இதுவரை யாரும் என்னிடம் மனு கொடுக்கவில்லை. இதுகுறித்து எனக்கு மனு கொடுத்தால், அதை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்வேன்“ என்றார்.


Next Story