விருதுநகர் அருகே 2 பெண்களுடன் வாலிபருக்கு நடைபெற இருந்த திருமணம் நிறுத்தம்
விருதுநகர் அருகே ஒரே மணமேடையில் வாலிபர் தாலிகட்ட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் சமூகநலத்துறை அதிகாரிகளின் தலையீட்டால் இந்த ஏற்பாட்டில் மாற்றம் செய்யப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள திருச்சுழியை அடுத்த எம்.செல்லையாபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவருடைய மனைவி கலைச்செல்வி. கலைச்செல்வியின் தம்பி ராமமூர்த்தி (வயது 31). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் இவர் சகோதரி கலைச்செல்வியின் வீட்டிலேயே வளர்ந்துள்ளார்.
கலைச்செல்வியின் மகள் பி.காம் பட்டதாரியான ரேணுகாதேவிக்கும், ராமமூர்த்திக்கும் திருமணம் முடிக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘ராமமூர்த்திக்கு தாரதோஷம் உள்ளதால் அவர் முதலில் வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்ட வேண்டும். பின்பு ரேணுகாதேவியை தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளலாம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் ராமமூர்த்தியின் மற்றொரு சகோதரியான அமுதவள்ளியின் மகள் காயத்திரியையும் ராமமூர்த்திக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. 20 வயதான காயத்ரி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
இதுதொடர்பான திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அதில் ராமமூர்த்தி 4–ந்தேதி (நாளை) ஒரே மணமேடையில் காயத்திரிக்கும், ரேணுகாதேவிக்கும் தாலி கட்டி திருமணம் செய்வார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அழைப்பிதழ் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுபற்றிய தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தவர்களை தொடர்பு கொண்டு எச்சரித்தனர். இதனையடுத்து அழகர்சாமியும், அவருடைய உறவினர்களும் விருதுநகர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி ராஜாத்தியை சந்தித்து ஜோதிடர் கூறியது குறித்து விளக்கம் அளித்தனர்.
ஆனால் இது தவறு என்று அதிகாரிகள் எச்சரித்தனர். அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில் இந்த திருமண ஏற்பாடு நிறுத்தப்பட்டது. ராமமூர்த்திக்கும் ரேணுகாதேவிக்கும் மட்டும் நாளை திருமணம் நடைபெறும் என புதிதாக ஒரு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அழைப்பிதழை சமூகநலத்துறை அதிகாரியிடமும் வழங்கினர்.
இதனை ஏற்றுக்கொண்ட சமூகநலத்துறை அதிகாரி, திருமணநாளன்று ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டுமே திருமணம் நடைபெற வேண்டும் என்றும், இதில் மாற்றம் ஏதும் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரேணுகாதேவியின் உறவினர்களை எச்சரித்து அனுப்பினார்.
இதுபற்றி சமூகநலத்துறை அதிகாரி ராஜாத்தி கூறுகையில், திருமணம் நடைபெறும் 4–ந்தேதி அன்று சமூக நலத்துறை அதிகாரிகள் முறையாக கண்காணித்து ராமமூர்த்திக்கும், ரேணுகாதேவிக்கும் மட்டும் திருமுணம் நடைபெறுவதை உறுதி செய்வார்கள் என்று தெரிவித்தார்.