‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஊர்வலம் சென்றபோது போலீசாருடன் மாணவர்கள் தள்ளுமுள்ளு – சாலை மறியல்


‘நீட்’ தேர்வுக்கு எதிராக ஊர்வலம் சென்றபோது போலீசாருடன் மாணவர்கள் தள்ளுமுள்ளு – சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Sep 2017 11:11 PM GMT (Updated: 6 Sep 2017 11:10 PM GMT)

வேலூரில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக நேற்று மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். அவர்களை தடுத்ததால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்,

‘நீட்‘ தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வேலூரிலும் கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வேலூர் ஓட்டேரியில் உள்ள முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ– மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையில் கல்லூரிக்கு வந்த அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் கல்லூரி முன்பு திரண்டனர். அங்கு மாணவி அனிதாவின் சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் கோ‌ஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் அங்கிருந்து வேலூர் பழைய பஸ்நிலையத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் நூற்றுக்கணக்கான மாணவ– மாணவிகள் கலந்துகொண்டனர். ஊர்வலம் விருப்பாட்சிபுரம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் மாணவ– மாணவிகளை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் மாணவ– மாணவிகள் அங்கிருந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் ரோட்டில் தடுப்புகளை வைத்து ஊர்வலத்தை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், மாணவ– மாணவிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மேலும் அங்கேயே ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோன்று வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்கள் நேற்று 2–வது நாளாக வகுப்புகளை புறக்கணித்து விட்டு வேலூர் பழைய பஸ்நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக ஊர்வலமாக புறப்பட்டனர். மக்கான் அருகே சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று கூறியதால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story