40 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை?


40 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை?
x
தினத்தந்தி 20 Sep 2017 11:32 PM GMT (Updated: 2017-09-21T05:02:08+05:30)

காங்கிரஸ் கட்சியில் 40 எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு(2018) நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆட்சியை கைப்பற்ற மூன்று கட்சிகளுமே முழுவீச்சில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனது எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் 40 தொகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சரியான முறையில் கட்சி பணிகளில் ஈடுபடுவது இல்லை என்றும், கட்சியை பலப்படுத்தும் பணிகளில் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்–மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நேரில் சந்தித்து இதுபற்றி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த 40 தொகுதிகளில் புதிய வேட்பாளர்களாக யாரை தேர்வு செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த 40 எம்.எல்.ஏ.க்கள் தங்களை கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுத்தி கொள்ளாவிட்டால் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு இல்லை என்று அவர்களுக்கு கட்சியின் மாநில தலைவர் பரமேஸ்வர் அறிவுறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த மாவட்டங்களில் வேட்பாளரை தேர்வு செய்ய 4 பெயர்களை இறுதி செய்து அனுப்பும்படி மாவட்ட தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த எம்.எல்.ஏ.க்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story