வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை - பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீடு புகுந்து பெண்ணை தாக்கி நகை - பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Oct 2017 10:15 PM GMT (Updated: 28 Oct 2017 8:21 PM GMT)

ஆம்பூர் அருகே பெண்ணை கட்டையால் தாக்கி 9 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆம்பூர்,

ஆம்பூர் அருகே கரும்பூர் சாமுண்டியம்மன் கோவில் தோப்பு உள்ளது. இப்பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். இவரது மனைவி உஷா (வயது 42). நேற்று முன்தினம் இரவு குணசேகரன் ஆம்பூருக்கு சென்றுவிட்டார். உஷா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீர் என வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உஷாவை கட்டையால் தலையில் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் தாலி சங்கிலி, பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.21 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

கட்டையால் தாக்கியதில் மயக்கம் அடைந்து கீழே விழுந்த உஷா, ½ மணி நேரம் கழித்து கண்விழித்து பார்த்தபோது கழுத்தில் இருந்த நகை, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து உஷா, கணவர் குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவர், வீட்டிற்கு வந்து மனைவியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

மேலும் இதுகுறித்து உமராபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Tags :
Next Story