பஸ் பயணியிடம் நகை திருடிய வழக்கில் முன்னாள் பெண் கவுன்சிலர் கோர்ட்டில் சரண்


பஸ் பயணியிடம் நகை திருடிய வழக்கில் முன்னாள் பெண் கவுன்சிலர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 14 Dec 2017 4:30 AM IST (Updated: 14 Dec 2017 2:34 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் நகை திருடியதாக பிடிப்பட்டு, போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய முன்னாள் பெண் கவுன்சிலர் நேற்று வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

வேலூர்,

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மனைவி இந்துமதி (வயது 45). இவர் கடந்த அக்டோபர் மாதம் 11-ந் தேதி வேலூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு பஸ்சில் வந்தார். ஆம்பூர் வந்ததும், அந்த பஸ்சில் நரியம்பட்டு பகுதியை சேர்ந்த பாரதி (43) என்பவர் ஏறினார். அவர், இந்துமதி இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

வேலூருக்கு டிக்கெட் வாங்கிய அவர் பள்ளிகொண்டாவில் பஸ் நின்றபோது இறங்கிவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த இந்துமதி, தான் வைத்திருந்த பையை பார்த்தபோது, அதில் வைத்திருந்த 5 பவுன் நகையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி பஸ் கண்டக்டரிடம் தெரிவித்தார்.

உடனே பஸ்சை நிறுத்தி, அந்தப் பெண்ணை தேடியபோது அந்த நேரத்தில் பின்னால் வந்து நின்றிருந்த ஒரு பஸ்சில் பாரதி அமர்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை பொதுமக்களின் உதவியோடு பிடித்து வேலூருக்கு அழைத்து வந்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் சோதனை செய்தபோது, இந்துமதியிடம் திருடிய 5 பவுன் நகையை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அந்த நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் பாரதியை வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தி.மு.க. சார்பில் ஒன்றிய கவுன்சிலராக இருந்தது, ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தது மற்றும் இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளதும் தெரியவந்தது. இதனால் இந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரணை நடத்துவதற்காக அன்று இரவு வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார். ஆனால் அவர் நள்ளிரவில் போலீசாரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதைத்தொடர்ந்து அவர் மீது வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பாரதியை தேடி வந்தனர். மேலும் அவர் தப்பிச்சென்ற நேரத்தில் மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த 3 பெண் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர், வேலூரில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3-ல் மாஜிஸ்திரேட்டு வெற்றிமணி முன்னிலையில் சரண் அடைந்தார்.

அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

Next Story