லிப்ட் கொடுப்பது போல் நடித்து ஆசிரியையிடம் செல்போன் பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு


லிப்ட் கொடுப்பது போல் நடித்து ஆசிரியையிடம் செல்போன் பறிப்பு வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Dec 2017 10:15 PM GMT (Updated: 2017-12-30T23:44:55+05:30)

‘லிப்ட்‘ கொடுப்பது போல் நடித்து ஆசிரியையிடம் செல்போனை பறித்துச் சென்ற ஆசாமியை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பஸ் நிறுத்தத்தில் நேற்று காலையில் 35 வயதுடைய ஆசிரியை ஒருவர் நின்று கொண்டிருந்தார். நாகர்கோவில் பஸ்சுக்காக அங்கு அவர் காத்திருந்தார்.

இந்தநிலையில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்தார். அவர் ஆசிரியையின் அருகில் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். நீங்கள் வேலை பார்க்கும் பள்ளியில் நான் டிரைவராக பணிபுரிந்தேன், ஞாபகம் இருக்கிறதா? என்று ஆசிரியையிடம் கேட்டார். உடனே அவர் சரியாக ஞாபகம் இல்லை என்று கூறியுள்ளார்.

நாகர்கோவிலுக்கு தான் செல்கிறேன், நீங்கள் வேண்டுமென்றால் என்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏறி கொள்ளலாம் என்று ஆசிரியையிடம் தெரிவித்தார். இதனை நம்பிய அவர், அந்த ஆசாமியுடன் மோட்டார் சைக்கிளில் ஏறி பயணம் செய்தார். சிறிது தூரம் சென்ற போது ஆசிரியையின் செல்போனுக்கு அவருடைய கணவர் தொடர்பு கொண்டார்.

இதற்காக ஆசிரியை, அந்த ஆசாமியிடம் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினார். அவரும் வாகனத்தை நிறுத்தினார். தொடர்ந்து ஆசிரியை, கணவரிடம் செல்போனில் பேசினார். அந்த சமயத்தில் திடீரென ஆசாமி, ஆசிரியையிடம் இருந்து செல்போனை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றார். உடனே திருடன், திருடன் என்று ஆசிரியை சத்தம் போட்டார். அதற்குள் ஆசாமி தப்பி விட்டார்.

இதுதொடர்பாக ஆசிரியை ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லிப்ட் கொடுப்பது போல் நடித்து ஆசிரியையிடம் செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story