வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்


வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 30 Dec 2017 9:30 PM GMT)

வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் நடந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு எல்லைகளை மறுவரையறை செய்தல் குறித்து அனைத்துக்கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத் துக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு தஞ்சை மாவட்டத்திற்கு தயார் செய்யப்பட்ட கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை பட்டியல் கடந்த 27-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளன. கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளுக்கும், கும்பகோணம் நகராட்சியில் 45 வார்டுகளுக்கும், பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகளுக்கும், 22 பேரூராட்சிகளில் 336 வார்டுகளுக்கும் வரையறுக்கப்பட்டுள்ளது. அதேபோல தஞ்சை, திருவையாறு, பூதலூர், ஒரத்தநாடு, திருவோணம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் 589 ஊராட்சி தலைவர்களும், 4,569 கிராம ஊராட்சி வார்டுகளும், 276 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும், 28 மாவட்ட ஊராட்சி வார்டுகளும் என பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு மறுவரையின் மீது கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை எழுத்துபூர்வமாக தெரிவிக்கலாம்.

2-ந் தேதி

இதனை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி, ஊராட்சிகள் உதவி இயக்குனர், மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகேசன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இளங்கோவன், தேர்தல் அலுவலர் நாகராஜ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Next Story