விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர்


விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 31 Dec 2017 10:00 PM GMT (Updated: 31 Dec 2017 9:37 PM GMT)

விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் பயணிகள் குவிந்தனர். அவர்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் மருத்துவ குணம் கொண்ட சுரபுண்ணை காடுகள் மற்றும் 3,300 கிளை வாய்க்கால்கள் உள்ளன. இதனை பார்த்து ரசிக்க தினந்தோறும் உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பள்ளி தொடர் விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி நேற்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து படகு சவாரி செய்து சுரபுண்ணை காடுகளை சுற்றிப்பார்த்தனர். அப்போது பலர் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அங்குள்ள குடில்களில் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவை பகிர்ந்து சாப்பிட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story