துறைமுக வழித்தடத்தில் 10 நாளில் 6 முறை ரெயில் சேவை பாதிப்பு


துறைமுக வழித்தடத்தில் 10 நாளில் 6 முறை ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 1 Jan 2018 4:15 AM IST (Updated: 1 Jan 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

தொழில்நுட்ப கோளாறுகளால் துறைமுக வழித்தடத்தில் 10 நாளில் 6 முறை ரெயில் சேவை பாதிக்கப்பட்டது பயணிகளை அதிருப்தி அடைய செய்து உள்ளது.

மும்பை,

மும்பையில் துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. – வாஷி, பேலாப்பூர், பன்வெல், பாந்திர, அந்தேரி வரையிலும் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை தினசரி லட்சகணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

துறைமுக வழித்தடத்தில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, அங்கு இயக்கப்பட்டு வந்த 9 பெட்டி மின்சார ரெயில்கள் அனைத்தும், 12 பெட்டி மின்சார ரெயில் சேவைகளாக மாற்றப்பட்டன.

இந்த நிலையில் வாரந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடந்த நிலையிலும் அண்மைகாலமாக துறைமுக வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை அடிக்கடி பாதிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. நேற்றுமுன்தினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாஷி – பன்வெல் இடையே நான்கு மணி நேரம் வரையிலும் மின்சார ரெயில் சேவை முடங்கியது. அப்போது ஆத்திரம் அடைந்த பெண் பயணி ஒருவர் தான் ரெயிலை இயக்குவதாக கூறி, மோட்டார்மேன் கேபினுக்குள் நுழைய முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். அரெயில்வே போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கடந்த 10 நாட்களில் மட்டும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 6 முறை ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

அடிக்கடி ரெயில்சேவை பாதிக்கப்படுவது துறைமுக வழித்தட பயணிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுபற்றி பயணி ஒருவர் கூறியதாவது:–

வாராந்திர பராமரிப்பு பணியின் போது, என்ன செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. இத்தனை லட்சம் மக்கள் பயணம் செய்யும் போக்குவரத்து சிஸ்டத்தில் கோளாறு என்பதே ஏற்படக் கூடாது. ரெயில்சேவை பாதிக்கப்பட்டு உள்ளது குறித்து துறைமுக வழித்தடங்களில் சரியாக அறிவிப்பு செய்வது கிடையாது.

பயணிகள் டிக்கெட்டை எடுத்து வைத்து கொண்டு ரெயிலுக்காக காத்திருக்க வேண்டும். கோளாறால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது பற்றி அறிவித்தால், ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்கு முன் சாலை மார்க்கமாக செல்வது பற்றி முடிவு செய்வார்கள்.

எனவே இதுபோன்ற நேரங்களில் முறையாக அறிவிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story