3¾ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு கலெக்டர் தகவல்


3¾ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 Jan 2018 4:30 AM IST (Updated: 19 Jan 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 74 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் -2018’ என்பது குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் முதல் தவணை நாளான வருகிற 28-ந் தேதி மற்றும் 2-ம் தவணை நாளான வருகிற மார்ச் மாதம் 11-ந் தேதி ஆகிய நாட்களில் வேலூர் மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட சுமார் 3 லட்சத்து 74 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 70 முகாம்கள் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களிலும், 14 முகாம்கள் போக்குவரத்து குறைவான மலைப்பகுதிகளிலும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 3 சுங்கச்சாவடிகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 8,324 பணியாளர்கள், 274 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலியோ சொட்டு மருந்து முகாமின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சமூக நலம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின்கீழ் அங்கன்வாடி பணியாளர்களை முகாமில் ஈடுபடுத்துதல், கல்வித்துறையின் மூலமாக முகாம் நடைபெறும் பள்ளிகள், முகாம் நாளன்று திறந்து வைத்து ஒத்துழைப்பு வழங்குதல், பள்ளியில் இறைவணக்கத்தின்போது போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் மாவட்ட எல்லைப்பகுதிகள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதை உறுதி செய்தல், காவல் துறை மூலமாக வதந்திகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மின்சாரத்துறை மூலமாக தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்த முகாம் முடிந்த அடுத்த ஒருவார காலத்திற்கு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் விடுபட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்துகள் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் இம்முகாமினை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுத்து பயன்பெற வேண்டும். இதற்கு அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணை இயக்குனர்கள் (பொது சுகாதாரம்) சுரேஷ், தேவபார்த்தசாரதி, அனைத்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், அனைத்து அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story