‘வாட்ஸ்-அப்’ மூலம் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தனியார் நிறுவன ஊழியர் கைது


‘வாட்ஸ்-அப்’ மூலம் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 8 Feb 2018 8:39 AM IST (Updated: 8 Feb 2018 8:39 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூரில் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பெண்ணுக்கு ஆபாச படங்களை அனுப்பிய தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை சேர்ந்த 28 வயது நிரம்பிய பெண்ணுக்கு கடந்த 4 மாதங்களாக ஒரு செல்போன் எண்ணில் இருந்து ‘வாட்ஸ்-அப்’ மூலமாக ஆபாசமான படங்கள் மற்றும் குறுந்தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த செல்போன் எண்ணில் இருந்து பேசிய நபர், அப்பெண்ணை பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகில் தனியாக வரும்படி அழைத்து உள்ளார்.

மேலும் வரவில்லை என்றால் நான் உனது வீட்டிற்கு வந்து விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதையடுத்து அங்கு வருவதாக ஒப்புக்கொண்ட அப்பெண் நேரில் சென்று, அவரிடம் பேச்சு கொடுத்து உள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த அவரது உறவினர்கள் அந்த மர்ம நபரை பிடித்து பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டம், என்.கே.புதூர், வடக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் வெங்கடேஷ் (வயது 27) என்பதும், கோவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

மேலும் அவர் முகநூலில் உள்ள பெண்களின் தொலைபேசி எண்களை எடுத்து, அவர்களுக்கு ஆபாச படங்கள் மற்றும் குறுந்தகவல்களை தொடர்ந்து அனுப்பி வருவதை வாடிக்கையாக கொண்டு இருந்து உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி இருப்பதும் தெரியவந்தது. அதுபோலவே, பரமத்திவேலூரை சேர்ந்த இப்பெண்ணுக்கும் முகநூலில் உள்ள அவரது புகைப்படத்தை எடுத்து, அவருக்கே அனுப்பி வைத்து, தொடர்ந்து ‘வாட்ஸ்-அப்’ மூலம் குறுந்தகவல்களை அனுப்பி வந்ததாகவும் கூறினார். இதையடுத்து வெங்கடேஷ் மீது வழக்குப்பதிவு செய்த பரமத்திவேலூர் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களை பாதுகாப்புடன் பயன்படுத்தவில்லை எனில் மிகுந்த மன உளைச்சலும், குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படும். எனவே மாணவிகள் மற்றும் பெண்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் போது, உண்மையான தகவல்கள், முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டாம் என போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். 

Next Story