மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் + "||" + In Karnataka, Congress will rule with a separate majority

கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்

கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் கூட கர்நாடகத்தில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

வருகிற தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் கட்சி வெற்றி பெறுவது முக்கியமான ஒன்றாகும். இதனால், தொகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படும். பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் இருந்து விலகி பலர் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு ஆர்வமாக இருப்பதாக ஏற்கனவே நான் கூறினேன். ஆனாலும், நாங்கள் தேர்வு செய்து தான் அவர்களை கட்சியில் சேர்த்து வருகிறோம்.

குறிப்பிட்ட தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளர் பலமாக இருந்தால் அங்கிருந்து பிறரை கட்சிக்குள் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு தொகுதியில் பலம் குறைந்து காணப்பட்டால் பிறரை கட்சியில் சேர்ப்பது குறித்து பரிசீலனை நடத்தப்படும்.

பீதர் தெற்கு, கூட்லகி, விஜயநகர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கட்சியில் சேருவதற்கு முன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. அவர்களுக்கு தேர்தலில் டிக்கெட் வழங்குவோம், வழங்க மாட்டோம் என எதுவும் கூறவில்லை. 3 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து ராகுல்காந்தி தான் முடிவு செய்வார். அசோக் கேனி பீதர் தெற்கு தொகுதியின் வெற்றி வேட்பாளர். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர ஆர்வம் காட்டினார். அப்படி இருக்கும்போது அவரை எதற்காக கட்சியில் சேர்த்து கொள்ளாமல் இருக்க வேண்டும்?. அவருடைய நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறும் வழக்கு 14–15 ஆண்டுகளாக உள்ளது. அந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்.

இதேபோல், விஜயநகர் தொகுதியில் ஆனந்த் சிங் வெற்றிபெறும் சக்தி கொண்டவர். இந்த தொகுதியை கைப்பற்ற முயற்சித்தபோது அது முடியவில்லை. எந்த கட்சி சார்பில் அங்கு ஆனந்த் சிங் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார். கூட்லகியில் நாகேந்திராவும் பலம் வாய்ந்த நபர். வருகிற தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். தொங்கு சட்டசபை உருவாகாது. கர்நாடகத்தில் தலித் முதல்–மந்திரியை அறிவிக்க வேண்டும் என்பது குறித்து கட்சி மேலிடமும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தான் முடிவு செய்வார்கள். சித்தராமையா அல்லது வேறு யாராவது முதல்–மந்திரியானாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

காங்கிரஸ் கட்சி என்பது ஒருங்கிணைந்த பலமான கட்சி. எனக்கும், சித்தராமையாவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகத்துக்கு வந்து பேசுகையில், கர்நாடக அரசு 10 சதவீத கமி‌ஷன் அரசு என கூறுகிறார். இதை கேட்டு கொண்டு அமைதியாக இருக்க முடியாது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜனதாவையும் விமர்சிக்கிறோம்.

வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் கர்நாடகத்தில் முற்றிலும் மாறுபட்ட நிலை உள்ளது. மோடி அலை எதுவும் இல்லை. மக்களுக்கான அரசு மாநிலத்தில் நடைபெறுவதால் எங்களுக்கான எதிர்ப்புகள் எதுவும் இல்லை. கர்நாடக தேர்தலை சந்திக்க தொண்டர்கள் அனைவருக்கும் நல்ல பயிற்சி வழங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.