பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: தமிழக கவர்னரை, ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் முத்தரசன் பேட்டி


பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: தமிழக கவர்னரை, ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 23 April 2018 11:00 PM GMT (Updated: 23 April 2018 8:38 PM GMT)

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தமிழக கவர்னர் அவசர, அவசரமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவரை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும் என்றும் திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருவாரூர்,

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினையில் மத்திய அரசு தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகிறது. மாநில உரிமைகளை காக்க வேண்டிய தமிழக அரசு அதனை மறந்து மத்திய அரசு இழைக்கும் துரோகத்திற்கு துணை போகிறது. அனைத்து கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி பிரதமரை சந்திக்க தவறியது ஏன்? அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆதரவை புறக்கணித்து விட்டு அ.தி.மு.க. தனிமைப்பட்டது ஏன்?

மத்திய அரசின் துரோகத்திற்கு தமிழக அரசு துணை போவது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு திருவாரூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க வேண்டும்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி மீதான வழக்கை கவர்னர் தரப்பும், மாநில அரசு தரப்பும் விசாரணை நடத்துகிறது. இந்த 2 விசாரணையும் பயன் அளிக்க போவதில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.

கவர்னர், இந்த விவகாரத்தில் அவசர, அவரசமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதன் காரணமாக அவர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஜனாதிபதி திரும்ப பெற வேண்டும். பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோர் பெண்கள் குறித்து தவறாக பேசி வருகின்றனர். ஆனால் தமிழக அரசு இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்களை கண்டு தமிழக அரசு ஏன் அஞ்சுகிறது? இருவரையும் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story