ஏரியில் கிணறு வெட்டும் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
விருத்தாசலம் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக தோண்டப்படுவதாக கூறி ஏரியில் கிணறு வெட்டும் பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு எதிராக பலகட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காவனூர் கிராமத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஏரியில் கிணறு வெட்டுவதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
விருத்தாசலம் அருகே காவனூரில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி அமைந்துள்ளது. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு பாசனத்திற்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த ஏரியை முறையாக தூர்வாராததால் ஏரி முழுவதும் தூர்ந்து போய், மழைநீரை முழுமையாக தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த ஏரியில் கடந்த மாதம் கிணறு தோண்டும் பணி தொடங்கியது. ஆனால் எதற்காக கிணறு தோண்டப்படுகிறது? என்ன திட்டம்? எவ்வளவு மதிப்பீடு என்ற விவரங்கள் குறித்த தகவல் பலகை வைக்கப்படவில்லை. தற்போது சுமார் 50 அடி ஆழம் வரை தோண்டப்பட்டு, கிணற்றை சுற்றிலும் கான்கிரீட் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.இதற்கிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக ஏரியில் கிணறு தோண்டப்படுவதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியது. இதையடுத்து காவனூர், மருங்கூர், கார்மாங்குடி, மேலப்பாளையூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கிணறு தோண்டப்படும் இடத்துக்கு திரண்டு சென்றனர்.
பின்னர் கிணறு வெட்டும் பணியை அவர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதற்கிடையில் கிணற்றை சுற்றிலும் கான்கிரீட் அமைக்கும் பணிக்காக விருத்தாசலத்தில் இருந்து ஜல்லி கற்கள் ஏற்றி வந்த லாரியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து விவசாயிகள், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே கிணறு தோண்டும் பணி நடந்து வருவதாகவும், இத்திட்டத்தை செயல்படுத்தினால் வெள்ளாறு, மணிமுக்தாறு இடையே உள்ள 15 கிராம விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள். இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்றும், இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையை வெள்ளாறு, மணிமுக்தாறு பகுதியில் தடுப்பணைகள் கட்டவும், வாய்க்கால், ஏரிகளை தூர்வாரவும் செலவிட வேண்டும் என்றும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.
இதுபற்றி அறிந்த புவனகிரி எம்.எல்.ஏ. துரை கி.சரவணன் அங்கு விரைந்து வந்து, விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து எதற்காக கிணறு அமைக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை கூற வேண்டும். இங்கு அமைக்கப்பட்டுள்ள கிணற்றை பார்க்கும் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான அடித்தளம் தான் என சந்தேகம் எழுகிறது. இதனால் மேற்கொண்டு கிணறு வெட்டும் பணிகளை தொடரக்கூடாது. அதையும் மீறி மீண்டும் தொடர்ந்தால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினார்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்தும் போலீசார் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதையடுத்து துரை கி.சரவணன் எம்.எல்.ஏ., விவசாயிகளை சமாதானப்படுத்தியதன் பேரில், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேபோல் மருங்கூரில் உள்ள பெரிய ஏரியிலும் கிணறு வெட்டும் பணி நடந்து வந்தது. இந்த பணிகளையும் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன், பஞ்சமூர்த்தி, பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பூமாலை, கனகரத்தினம், ரங்கநாதன், மற்றும் செந்தில், ராஜவன்னியன், உழவர் மன்ற தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story