பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மாரடைப்பால் மரணம்


பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் மாரடைப்பால் மரணம்
x
தினத்தந்தி 4 May 2018 11:58 PM GMT (Updated: 4 May 2018 11:58 PM GMT)

பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 12-ந் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ளன. இந்த நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ. விஜயகுமார் அறிவிக்கப்பட்டிருந்தார். இவருடைய வயது 70. அவர் நேற்று முன்தினம் தீவிர பிரசாரம் மேற்கொண்டு இருந்தார். கொளுத்தும் வெயிலிலும் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை தொண்டர்கள் ஜெயதேவா இதயநோய் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆயினும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் விஜயகுமார் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து அவருடைய உடல் ஜெயநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு பா.ஜனதா மாநில தலைவரும், முதல்-மந்திரி வேட்பாளருமான எடியூரப்பா, மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, அனந்தகுமார், பிரகாஷ் ஜவடேகர், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் ஆகியோர் நேரில் சென்று விஜயகுமாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் மாலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பா.ஜனதாவினர் கலந்துகொண்டனர்.

பா.ஜனதா அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி என்பதால், ஜெயநகர் தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பதற்காக தேதி அறிவிக்கப்படவில்லை.

கடந்த 2013-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது இதே போல் மைசூரு மாவட்டம் பிரியபட்டணா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மரணம் அடைந்ததை அடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஏற்கனவே 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயகுமார், தற்போது 3-வது முறையாக பா.ஜனதா சார்பில் போட்டியிட்டார். எளிமையான, நேர்மையான அரசியல்வாதி விஜயகுமார் என்று பா.ஜனதாவினர் புகழஞ்சலி சூட்டினர். 

Next Story