மாவட்ட செய்திகள்

கர்நாடக அணைகளில் 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது + "||" + There is only 10 TMC water in karnataka dams

கர்நாடக அணைகளில் 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது

கர்நாடக அணைகளில் 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் உள்ளது
கர்நாடக அணைகளில் 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது என்று காவிரி நீர்ப்பாசன துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மண்டியா,

காவிரி நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகியவை முக்கியமான அணைகள் ஆகும். இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் தான் தமிழகத்துக்கு செல்கிறது. காவிரி ஆற்றின் குறுக்கே தான் இந்த அணைகள் அமைந்துள்ளன.


இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் போதிய மழை பெய்யாமல், கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருவதால் முக்கியமான 4 அணைகளிலும் சேர்த்து 10 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் தான் உள்ளது. 4 அணைகளும் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளது.

இந்த 4 அணைகளிலும் சேர்த்து மொத்தம் 104.55 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம். ஆனால், தற்போது அந்த அணைகளில் 10 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையில் 45.05 டி.எம்.சி. வரை தண்ணீர் சேமிக்கலாம். ஆனால் தற்போது அந்த அணையில் 3.44 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டையில் அமைந்துள்ள கபினி அணையில் 1.82 டி.எம்.சி. (மொத்த இருப்பு 15.67 டி.எம்.சி.) தண்ணீரும், ஹாசனில் உள்ள ஹேமாவதி அணையில் 3.33 டி.எம்.சி. (மொத்த இருப்பு 35.76 டி.எம்.சி.) தண்ணீரும், குடகில் உள்ள ஹாரங்கி அணையில் 1.35 டி.எம்.சி. (மொத்த இருப்பு 8.07 டி.எம்.சி.) தண்ணீரும் உள்ளன.

4 அணைகளிலும் தண்ணீர் குறைவாக உள்ளதால், இதனை வைத்து குடிநீர் தேவைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். இந்த அணைகளில் இருந்து தினமும் தமிழ்நாடு மற்றும் பெங்களூரு பகுதிக்கு என 1,200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் 100 கனஅடி தண்ணீர் கால்வாய் வழியாக மைசூரு, மண்டியா, ஹாசன் மாவட்டங்களுக்கு கால்நடைகளுக்கு குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படுகிறது. மேலும் அந்த அணைகளில் இருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் தேவைக்கு தினமும் 1,300 லிட்டர் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இத்தகைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீரை திறக்க உத்தரவிட்டுள்ளது. மழை பெய்தால் தான் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனால் கர்நாடக விவசாயிகள் கே.ஆர்.எஸ். அணையின் முன்பு போராட்டத்தில் ஈடுபடலாம் என்பதால், கே.ஆர்.எஸ். அணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.