ரேஷன் பொருட்களை வாங்கி விற்பது குற்றமாகும் - போலீஸ் சூப்பிரண்டு ருபேஷ்குமார் மீனா


ரேஷன் பொருட்களை வாங்கி விற்பது குற்றமாகும் - போலீஸ் சூப்பிரண்டு ருபேஷ்குமார் மீனா
x
தினத்தந்தி 5 May 2018 12:08 AM GMT (Updated: 5 May 2018 12:08 AM GMT)

ரேஷன் பொருட்களை வாங்கி விற்பது குற்றமாகும் என்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ருபேஷ்குமார் மீனா கூறினார்.

நாகர்கோவில்,

உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நாகர்கோவில் கோணத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் குழித்துறை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வரவேற்றார். வட்ட வழங்கல் அதிகாரிகள் பாண்டியம்மாள், வினோத், பறக்கும் படை தாசில்தார் ராஜசேகர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல துணை மேலாளர் குமார் காந்தி, கண்காணிப்பாளர் ராமசந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ருபேஷ்குமார் மீனா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் பொருட்களை பதுக்கி வைப்பதும், கடத்துவதும் சட்டப்படி குற்றமாகும். ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்க கூடாது. அவ்வாறு செய்தால் அதுவும் குற்றச் செயல்களில் ஒன்று. ரேஷன் பொருட்களை வாங்கி விற்பதும் குற்றமாகும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் எவரேனும் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்தாலோ அல்லது கடத்திச் சென்றாலோ கட்டாயமாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தகவல் தெரிவிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று நினைக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு குறைவாக இருந்தால் வழங்கல் அதிகாரிகள் அல்லது குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறையில் முறையிடலாம். பெட்ரோல் மற்றும் டீசலில் கலப்படம் செய்தாலும் புகார் அளிக்கலாம். ரேஷன் கடைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் பொருட்களை வாகனத்தில் எடுத்துச் சென்றால் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன் நன்றி கூறினார்.

Next Story