காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு ஆதரவாக முடிவு எடுக்க வேண்டும்


காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு ஆதரவாக முடிவு எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 5 May 2018 12:13 AM GMT (Updated: 5 May 2018 12:13 AM GMT)

காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு ஆதரவாக முடிவு எடுக்க வேண்டும் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டார். அவர் நேற்று தாவணகெரே மாவட்டம் சென்னகிரி நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-

பிரதமர் மோடி பேச்சு மட்டுமே பேசுகிறார். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. தேர்தலை மனதில் வைத்து தேவேகவுடாவை மோடி புகழ்ந்து பேசுகிறார். கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் முழு பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்கும். இது உறுதி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். பாதாமி மற்றும் சாமுண்டீஸ்வரி ஆகிய தொகுதிகளில் நான் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்.

நான் கன்னடர் என்று சொல்லிக்கொண்டு மோடி கர்நாடகத்திற்கு வருகிறார். கன்னடர்களுக்கு மோடி என்ன செய்தார்?. உண்மையிலேயே கன்னடர்கள் மீது மரியாதை இருந்தால் கர்நாடக கொடிக்கு அவர் அனுமதி வழங்க வேண்டும். மகதாயி, காவிரி பிரச்சினையில் மோடி எப்போதும் மவுனம் வகித்து வருகிறார். அதில் இப்போதாவது, கர்நாடகத்திற்கு ஆதரவாக மோடி முடிவு எடுக்க வேண்டும்.

பா.ஜனதா கட்சியில் நிறைய பேர் தந்தை-மகன், சகோதரர்கள் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். அதை மோடி மறக்கக்கூடாது. லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கும் முடிவை நாங்களாகவே எடுக்கவில்லை. அந்த சமூகத்தினர் கோரிக்கை விடுத்ததால், அதை ஏற்று கர்நாடக அரசு முடிவு எடுத்தது. இது முந்தைய பா.ஜனதா அரசு ஆட்சியில் இருந்தபோது எழுந்த கோரிக்கை ஆகும். நாங்கள் யாருடனும் கூட்டணி அமைக்கவில்லை. வளர்ச்சி பணிகளே எங்களுக்கு கைகொடுக்கும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார். 

Next Story