மாவட்ட செய்திகள்

மைனர் பெண்ணை கடத்தி திருமணம் + "||" + Minor girl kidnapped and marriage

மைனர் பெண்ணை கடத்தி திருமணம்

மைனர் பெண்ணை கடத்தி திருமணம்
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த ஆந்திர வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஈரோடு

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கற்றாலமிட்டல் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசலு (வயது 26). இவர் கத்தார் நாட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி ரேகாபானு (வயது 34) முகநூல் மூலம் அறிமுகமானார். பின்னர் ரேகாபானு தனக்கு தெரிந்த ஒரு 16 வயது மைனர் பெண்ணை சீனிவாசலுவுடன் பேச வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து ரேகாபானு சீனிவாசலுவிடம், அந்த பெண்ணை திருமணம் செய்து அழைத்து செல்லும்படி கூறியதாக தெரிகிறது.

இதனால் சீனிவாசலு கத்தார் நாட்டில் இருந்து கடந்த மாதம் 28-ந்தேதி ஈரோட்டிற்கு வந்தார். பின்னர் அவர், மைனர் பெண்ணை கடத்திக்கொண்டு வேலூர் மாவட்டம் வெள்ளிமலைக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் அந்த பெண்ணை தனது சொந்த ஊரான ஆந்திர மாநிலம் கற்றாலமிட்டல் கிராமத்துக்கு கூட்டி சென்றார். அங்கு இருவரும் கணவன், மனைவிபோல் வாழ்ந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே மைனர் பெண்ணின் தாய் தனது மகளை காணவில்லை என்று ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து ஆந்திர மாநிலம் கற்றாலமிட்டல் கிராமத்துக்கு சென்று மைனர் பெண்ணை மீட்டதுடன், சீனிவாசலுவையும் கைது செய்து ஈரோட்டிற்கு கொண்டு வந்தனர்.

மேலும் 16 வயது மைனர் பெண்ணை கடத்திச்செல்ல உடந்தையாக இருந்த ஈரோட்டை சேர்ந்த ரேகாபானு என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சீனிவாசலு மீது போக்சோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.