கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்


கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 9:15 AM GMT (Updated: 12 May 2018 9:15 AM GMT)

கள்ளக்குறிச்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் மற்றும் காலனி பகுதியை சேர்ந்த 12, 13-வது வார்டுகளில் 1,200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு ஏமப்பேர் மந்தைவெளி அருகில் ரேஷன் கடை கட்டப்பட்டு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

அதிக குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதால் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கிச்செல்கின்றனர். இதில் பலருக்கு ரேஷன் பொருட்கள் முறையாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் காலனி மற்றும் ஊர்தரப்பு மக்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

எனவே காலனி மக்கள், தங்கள் பகுதியிலேயே ரேஷன் கடை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி காலனி பகுதியில் ரூ.3 லட்சம் செலவில் பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டு, கடந்த 2016-ம் ஆண்டு திறக்கப்பட்டது.

இந்நிலையில் திறப்பு விழா கண்டு 2 ஆண்டுக்கு மேல் ஆகியும், இதுவரையில் பகுதி நேர ரேஷன் கடையில் இருந்து காலனி மக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை. கடை பூட்டியே கிடக்கிறது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஏமப்பேர் காலனி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பூட்டியே கிடக்கும் ரேஷன் கடையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கோரி காலனி பகுதி பெண்கள் நேற்று காலை 10 மணிக்கு புதிதாக கட்டப்பட்ட பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம் முன்பு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த ரேஷன் கார்டுகளை கீழே போட்டு, பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடையை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்து வந்த ஊர் முக்கியஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story