குழந்தை கடத்தல் வதந்தியால் தாக்கப்பட்ட 2 பேர் பலி எதிரொலி: சாலையில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் மீட்டனர்


குழந்தை கடத்தல் வதந்தியால் தாக்கப்பட்ட 2 பேர் பலி எதிரொலி: சாலையில் சுற்றித்திரிந்த 2 பேரை போலீசார் மீட்டனர்
x
தினத்தந்தி 12 May 2018 11:00 PM GMT (Updated: 12 May 2018 8:36 PM GMT)

குழந்தை கடத்தல் கும்பல் வதந்தி பரவியதன் எதிரொலியாக கிராம மக்களால் தாக்கப்பட்ட 2 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக கண்டமங்கலத்தில் சாலையில் சுற்றித் திரிந்த சந்தேக நபர்கள் 2 பேரை போலீசார் பிடித்து ஆசிரமத்தில் ஒப்படைத்தனர்.

கண்டமங்கலம்,

தமிழகத்தில் குழந்தை கடத்தல் கும்பல் நடமாடுவதாக வாட்ஸ்–அப் சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தி காரணமாக சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் அருகே குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகப்பட்டு கிராம மக்கள் ருக்மணி என்ற மூதாட்டியை அடித்துக் கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னை பழவேற்காடு பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபரை, குழந்தையை கடத்த வந்தவர் என சந்தேகப்பட்டு பொது மக்கள் தாக்கியதில் அவர் பலியானார். உடனே அந்த கும்பல் அவருடைய உடலை கயிற்றில் கட்டி பழவேற்காடு ஏரியின் மீது கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கைப்பிடி சுவரில் தொங்கவிட்டது.

இந்த 2 சம்பவங்களில் போலீசார் பலரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகப்படுபவர்களை பிடித்து தாக்க வேண்டாம், அவர்களைப் பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுங்கள் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் கிராமங்களில் சென்று அறிவுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலும் இதுபோன்று குழந்தை கடத்தல் வதந்தி காரணமாக சாலைகளில் திரிபவர்கள் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்துவிடாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். அந்த அடிப்படையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் கண்டமங்கலம் போலீசாரும் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கண்டமங்கலம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது கண்டமங்கலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெயர் ஸ்ரீமன் (வயது 45) என்பது தெரிய வந்தது. ஆதரவற்ற அவர் தாடியும், மீசையுமாக பரிதாபமான நிலையில் இருந்தார். அவரை குழந்தை கடத்தல்காரர் என் சந்தேகம் அடைந்து பொது மக்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக கருதிய போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அதேபோல் கண்டமங்கலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த கண்டமங்கலம் அருகே உள்ள பண்ணைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரனையும் போலீசார் பிடித்து போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் அவர்கள் 2 பேரையும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த குண்டலபுலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஸ்ரீமன் மற்றும் ராமச்சந்திரன் ஆகிய 2 பேரையும் ஆசிரம பொறுப்பாளர் ஜுபின் பேபியிடம் ஒப்படைத்தனர்.


Next Story