மாவட்ட செய்திகள்

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் தங்கமணி தகவல் + "||" + For the last 3 years, Tamil Nadu has become a powerless state

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் தங்கமணி தகவல்

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது அமைச்சர் தங்கமணி தகவல்
கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது என அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மண்டல அளவிலான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் தொடர்பான பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார்.


தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சந்திரசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு, மின்வாரிய பணிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வு கூட்டத்தில், புதிதாக வழங்கப்பட்ட குறைந்தழுத்த, உயரழுத்த மின் இணைப்புகள் குறித்தும், தேவைப்படும் மின்சாதனங்கள், பணியாளர்களின் எண்ணிக்கை, மின் பயன்பாட்டாளர்களின் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்தும் அமைச்சர் தங்கமணி விரிவாக ஆய்வு செய்தார்.


கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி கூறியதாவது:–

கடந்த 3 ஆண்டுகளாக தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக திகழ்கிறது என்பதை விட, மின்மிகை மாநிலமாக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கி தந்து உள்ளார். இதை நாம் தொடர்ந்து, இதே நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு சிறந்த மின் சேவையை அளிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது பொதுமக்கள் 5 நிமிடம் மின்வெட்டு ஏற்பட்டால் கூட, உடனடியாக அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் தெரிவிக்கும் அளவிற்கு மக்கள் விழிப்புணர்வாக இருக்கின்றார்கள்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து 8 மணி நேரம், 5 மணி நேரம் கூட மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருந்தது. தற்போது ஏதாவதொரு பகுதியில் மழை காரணமாகவோ, மரங்கள் விழுவதாலோ மின்வெட்டு ஏற்பட்டால் கூட உடனே மக்கள் மின்வெட்டு எனக்கூறி கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1912–ஐ அழைக்கின்றனர். அந்த எண் கிடைக்கவில்லை என்றால், உடனே அமைச்சரான எனக்கு இரவு நேரங்களில் கூட அழைக்கின்றனர். உடனே நானும் மின்வாரியத்துறை இயக்குனரை அழைத்து, அந்த பகுதியில் என்ன பிரச்சினை என்று கேட்கிறேன். அந்த அளவிற்கு மக்கள் விழிப்புணர்வாக இருக்கின்றார்கள். அதற்கேற்றார்போல் நடைமுறையினையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.


விவசாயிகளுக்கு விவசாய பணிகளுக்காக விரைவாக மின் இணைப்பு வழங்கும் தட்கல் திட்டத்தின் கீழ் இதுவரை ஈரோடு மண்டலத்தில் 1,737 மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 2449 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் விவசாய பம்பு செட்டுகளுக்காக 2017–2018–ம் ஆண்டில் மட்டும் பதிவு வரிசை முன்னுரிமை அடிப்படையில் 2,995 மின் இணைப்புகளும், சுய நிதித்திட்டங்களின் கீழ் 1,115 மின் இணைப்புகளும், அரசு திட்டங்களின் கீழ் 32 மின் இணைப்புகளும், தட்கல் திட்டத்தின் கீழ் 2,291 மின் இணைப்புகளும் என மொத்தம் 6,433 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குனர் ஹெலன், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக இயக்குனர் செந்தில்வேலன், மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, ஈரோடு மண்டல தலைமை பொறியாளர் சந்திரசேகரன் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.


பின்னர் அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மின்சார வாரிய பணிகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக திருச்சி, ஈரோடு மண்டலங்களில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் மட்டும் அல்லாமல் எப்பொழுதுமே இனி மின்வெட்டு இருக்காது. ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 1.7.2017 முதல் தற்போது வரை 3 லட்சம் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளன. தட்கல் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டும் அது தொடரும். மேலும் மானிய கோரிக்கையின் போது பல்வேறு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.