மாவட்ட செய்திகள்

விவசாய போலீஸ் + "||" + Agricultural police

விவசாய போலீஸ்

விவசாய போலீஸ்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திலுள்ள அம்பலவாயல் போலீஸ் நிலையம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது.
இயற்கை அழகு அதற்கு மேலும்  சேர்க்கும் விதமாக அங்கு பணிபுரியும் போலீசார் இயற்கை வேளாண்மை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட காய்கறி வகைகளை விளைவிக்கிறார்கள். அவைகளை பராமரிக்கும் பணியில் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபடுகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு வரை போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதி புதர் மண்டி கிடந்திருக்கிறது. அதனை சீரமைக்க சப்-இன்ஸ்பெக்டர் அப்பாஸ் அலி முயற்சி மேற்கொண்டிருக்கிறார். அப்போதுதான் அவருக்குள் இயற்கை விவசாயம் செய்யும் யோசனை எழுந்திருக்கிறது.

போலீஸ் நிலைய சுற்றுப்பகுதி தூய்மையாவதுடன், விளையும் காய்கறிகளை வீட்டு சமையலுக்கு பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தில் பெரும்பாலான போலீசார் முழு மூச்சுடன் விவசாய பணியில் தங்களை இணைத்துவிட்டார்கள்.

என்னென்ன பயிர்களை விளைவிப்பது என்பது பற்றி போலீசார் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி விவசாய பணிகளை தொடங்கி விட்டார்கள்.

‘‘முதலில் நாங்கள் விவசாயி களிடமிருந்து கற்றுக்கொண்டோம். பின்பு நாங்களே விவசாயிகளாகிவிட்டோம். பணி நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை இந்த விவசாய சாகுபடி குறைத்துக் கொண்டி ருக்கிறது.

இங்கு வந்து பயிர்களுடன் சில நிமிடங்கள் செலவிட்டால்போதும். மனம் நிம்மதி அடைந்துவிடும். இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள் வரை எல்லோரும் விவசாய வேலைகளில் ஈடுபடுகிறோம். நாங்கள் தினமும் சில மணி நேரங்களாவது விவசாயிகளாக மாறிவிடுகிறோம்.

4 வகையான மிளகாய், மூன்று வகையான கத்தரிக்காய், பூசணிக்காய், தக்காளி, புடலங்காய், கீரை, பீன்ஸ், பாகற்காய், முட்டைக்கோஸ் என ஏராளமான காய்கறிகள் விளைகின்றன. இவைகளை எங்கள் வீட்டு சமையலுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

தற்போது எங்கள் தேவைக்கு அதிகமாக காய் கறிகள் விளையத் தொடங்கி இருக்கிறது. அவைகளை சந்தைவிலைக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சாமி.