விவசாயி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள் போலீசார் விசாரணை
ஆத்தூர் அருகே விவசாயி வீட்டை அடித்து நொறுக்கிய மர்ம ஆசாமிகள் போலீசார் விசாரணை.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் (வயது 52). விவசாயி. இவர் கோர்ட்டில் பல்வேறு பொது நல வழக்குகள் தொடர்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு ராமகிருஷ்ணன், இவரது தந்தை வெங்கடாசலம், தாய் அமிர்தம், மகள் ஸ்ரீமதி ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர்.
அப்போது அங்கு 2 மோட்டார்சைக்கிள்களில் மர்ம ஆசாமிகள் வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடியை உடைத்தனர். மேலும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதையடுத்து அவர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து ராமகிருஷ்ணன் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.