ஏரி பூங்காவில் உணவு பாதுகாப்பு மைய கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்


ஏரி பூங்காவில் உணவு பாதுகாப்பு மைய கண்காட்சி அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 May 2018 4:00 AM IST (Updated: 16 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில் உணவு பாதுகாப்பு மைய கண்காட்சியை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு பாதுகாப்பு மைய கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு, கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். கண்காட்சியை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் சுற்றுலா தளங்களில் உணவு பாதுகாப்பு மையத்தை அமைத்து பாதுகாப்பான மற்றும் தரமான உணவுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோடை காலத்தில் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க, வழக்கங்கள் பற்றி பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு சுமார் 1 மாத காலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தரமான பாதுகாப்பான உணவை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதே இத்துறையின் நோக்கமாகும். பொதுமக்கள் இதுபோன்ற முகாம்களை பார்வையிட்டு உணவு பொருட்கள் தரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் தேன், மிளகு மற்றும் டீ தூள், பால் உள்ளிட்ட பொருட்களில் ஏதாவது கலப்படம் உள்ளதா? என்பதை விழிப்புடன் பார்த்து வாங்க வேண்டும். தரமற்ற பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வெண்டும். வெளியில் செல்லும்போது குடை, தொப்பி, காலனிகளை பயன்படுத்த வேண்டாம். வீட்டில் ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து காற்றோற்றமாக வைத்திருக்க வேண்டும். மேலும், அதிக சோர்வு, மயக்கம் ஆகியவற்றை தவிர்க்க உப்பு கரைசல் நீரை பருக வேண்டும். பொதுமக்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொண்டு, தரமான உணவு மற்றும் நமது பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கோடை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட நியமன அலுவலர் பிருந்தா, தாசில்தார் பண்டரிநாதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் சீனிவாசன், மாவட்ட பாசறை தலைவர் மாரேகவுடு, மாவட்ட பொருளாளர் நாராயணன், மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story