தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு


தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 May 2018 4:00 AM IST (Updated: 17 May 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட அதிகரித்து உள்ளது. மாநில அளவில் தர்மபுரி மாவட்டம் தற்போது 16-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தர்மபுரி,

பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் 93 அரசு பள்ளிகளை சேர்ந்த 13 ஆயிரத்து 288 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினார்கள். இவர்களில் 11 ஆயிரத்து 851 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவீதம் 89.19 ஆகும்.

கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை எழுதிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளில் 88.70 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது .49 சதவீதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்ச்சி சதவீதம் 92.79 ஆக அதிகரித்து உள்ளது. குறிப்பாக அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளதால் மாநில அளவில் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சியில் 20-வது இடத்தை பெற்றிருந்த தர்மபுரி மாவட்டம் தற்போது 16-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

அரசு பள்ளிகளில் படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்த மாணவ-மாணவிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் எடுத்த முயற்சியின் காரணமாக அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. தற்போது அரூரை தலைமையிடமாக கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவ- மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த கூடுதல் கவனம் செலுத்தும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story