வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.160 கோடி கடன் கூடுதல் ஆணையாளர் தகவல்


வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.160 கோடி கடன் கூடுதல் ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 18 May 2018 4:15 AM IST (Updated: 18 May 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.160 கோடி கடன் வழங்கப்பட்டு வருகிறது என்று தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையாளர் ராஜேஷ் கூறினார்.

சேலம்,

மத்திய அரசு திட்டத்தின் மூலம் கடன் பெற்று நாட்டு வகை மரத்தினால் ஆன மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இதை தமிழக தொழில் வணிகத்துறை கூடுதல் ஆணையாளர் ராஜேஷ் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு உள்ள தளவாட பொருட்களின் தரம் மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் முறைகள் குறித்து அதன் உரிமையாளர் செல்வராஜிடம் கேட்டு அறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க ஒவ்வொரு ஆண்டும் ரூ.160 கோடி கடன் வழங்கப்பட்டு வருகிறது. வேலையில்லா பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. முதல் பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

தொழில் தொடங்குபவர்களுக்கு 10 முதல் 25 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது. இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கான அனுமதியை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதனால் தொழில் தொடங்க விண்ணப்பிப்பவர்களுக்கு அதற்கான உத்தரவுகள் விரைந்து வழங்கப்பட்டு வருகிறது. அதே போன்று வங்கிகளில் விரைந்து கடன் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறோம். எனவே வேலையில்லா இளைஞர்கள் தொழில் தொடங்க முன் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

Next Story