தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன், வைத்திலிங்கம் எம்.பி. திடீர் சந்திப்பு


தஞ்சையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன், வைத்திலிங்கம் எம்.பி. திடீர் சந்திப்பு
x
தினத்தந்தி 18 May 2018 4:30 AM IST (Updated: 18 May 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் தங்கி இருந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை, அ.தி.மு.க. எம்.பி. வைத்திலிங்கம் நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

தஞ்சாவூர்,

பாரதீய ஜனதா கட்சி சார்பில் ‘உழவனின் உரிமை மீட்பு சைக்கிள் பேரணி’ நடைபெற்று வருகிறது. இந்த பேரணியை நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் திருவையாறில் நடந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

நேற்று காலை அவர் தஞ்சையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கி இருந்தார். அப்போது அருகில் உள்ள மற்றொரு சுற்றுலா மாளிகை கட்டிடத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தங்கி இருந்தார். அவர் பொன்.ராதாகிருஷ்ணன் தங்கி இருந்த தகவல் கிடைத்ததும் உடனடியாக மத்திய மந்திரியை சந்தித்து பேசினார். 30 நிமிடத்துக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்தது.

பின்னர் வெளியே வந்த வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறுகையில், “மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தஞ்சைக்கு வந்துள்ளதால் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன்”என்றார். அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, முன்னாள் மாவட்ட செயலாளர் துரை.திருஞானம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், முன்னாள் தொகுதி இணை செயலாளர் பாலை.ரவி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

Next Story