ஸ்ரீவைகுண்டத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு: இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்


ஸ்ரீவைகுண்டத்தில் மின்சாரம் தாக்கி ஊழியர் சாவு: இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 20 May 2018 2:45 AM IST (Updated: 19 May 2018 8:09 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம், 

ஸ்ரீவைகுண்டத்தில் மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்வாரிய ஊழியர் சாவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பேச்சிமுத்து (வயது 38). மின்வாரிய ஊழியரான இவர் நேற்று முன்தினம் ஸ்ரீவைகுண்டம் தெற்கு தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்ய முயன்றுள்ளார். அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்கள் சாலை மறியல்

இந்த நிலையில் பேச்சிமுத்துவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஸ்ரீவைகுண்டம்–நெல்லை மெயின் ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய அலுவலகத்தில் பேச்சிமுத்து துப்புரவு வேலை செய்து வந்ததாகவும், அவரை அவ்வப்போது ஒயர்மேன் வேலைக்கும் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றதால் தான் அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாகவும், எனவே அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆதி தமிழர் பேரவை அருந்ததியர் அரசு மாநில அமைப்பு செயலாளர் முருகேசன், தமிழ் புலிகள் அமைப்பின் மாவட்ட செயலாளர் தாஸ் ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் பேச்சிமுத்துவின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்.

பேச்சுவார்த்தை

இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு மின்வாரிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் கமலம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் மாலையில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள், தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு பொன் ராமு, ஸ்ரீவைகுண்டம் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) பலவேசம் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், இழப்பீட்டு தொகை வழங்குவதற்கும், அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் பேச்சிமுத்துவின் சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story