‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா?’’ சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி


‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா?’’ சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி
x
தினத்தந்தி 23 May 2018 3:00 AM IST (Updated: 23 May 2018 12:17 AM IST)
t-max-icont-min-icon

சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா?’’ என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பெங்களூரு,

சித்தராமையா மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ‘‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா?’’ என்று அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 38 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றனர்.

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜனதா தளம்(எஸ்)–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இன்று(புதன்கிழமை) பொறுப்பு ஏற்கிறது. குமாரசாமி முதல்–மந்திரியாக பதவி ஏற்கிறார். அதைத்தொடர்ந்து நாளை(வியாழக்கிழமை) கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் அதிருப்தி

இதையடுத்து குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டலுக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேற்று வந்தனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

அவர்கள் பேசும்போது, “நீங்கள் மட்டும் தினமும் வீட்டுக்கு சென்று விடுகிறீர்கள். எங்களை இங்கேயே தங்க வைத்துள்ளீர்கள். எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?. நம்பிக்கை இல்லை என்றால் எதற்காக எங்களுக்கு டிக்கெட் கொடுத்தீர்கள். நாங்கள் எங்கள் குடும்பத்தினரை பார்க்க வேண்டாமா?“ என்று கூறி கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவடையும் வரை எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவிலேயே தங்கி இருப்பார்கள் என்று காங்கிரஸ் ஏற்கனவே கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story