சிவகங்கையில் கனமழை; 90 மி.மீ. பதிவு


சிவகங்கையில் கனமழை; 90 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 24 May 2018 11:00 PM GMT (Updated: 24 May 2018 10:56 PM GMT)

சிவகங்கையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 90 மி.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோன்று மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கியதில் இருந்தே அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

குறிப்பாக சிவகங்கையில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் தெரியாத அளவிற்கு மாவட்டத்தில் வானம் மேக கூட்டமாக காணப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் சிவகங்கையில் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

இங்கு ஒரே நாளில் 90 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த மழையால் நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது.

மேலும் மழையுடன் காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

இதேபோன்று திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:- சிவகங்கை 90, மானாமதுரை 20.6, இளையான்குடி 8, திருப்புவனம் 14.4, திருப்பத்தூர் 10.2, காரைக்குடி 6.

Next Story