ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது


ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் நகை பறித்த வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 27 May 2018 10:30 PM GMT (Updated: 27 May 2018 8:51 PM GMT)

காங்கேயம் அருகே கணவன்-மனைவி போல் நடித்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியின் மனைவியிடம் நகை பறித்து சென்ற வழக்கில் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.

காங்கேயம்,

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரியப்பா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவருடைய மனைவி கண்ணம்மாள் (வயது 64). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கரூர் ரோட்டில் உள்ள ஆயி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட பஸ்சில் காங்கேயத்திற்கு வந்தார். பின்னர் காங்கேயம் பஸ்நிலையத்தில் இருந்து ஆயி அம்மன் கோவிலுக்கு செல்ல அருகே ஒரு ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள ஆட்டோ டிரைவரிடம் விசாரித்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கே ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் கண்ணம்மாளிடம் சென்று நாங்களும் ஆயி அம்மன் கோவிலுக்குத்தான் செல்ல உள்ளோம் என்றும், மூன்று பேரும் ஒரே ஆட்டோவில் செல்லலாம். ஆட்டோ கட்டணத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறினார்கள்.

இதை தொடர்ந்து கண்ணம்மாளுடன் அவர்கள் இருவரும் சேர்ந்து ஆட்டோவில் ஏறி அமர்ந்து கோவிலுக்கு சென்றனர். கோவிலுக்கு ஆட்டோ சென்றவுடன் அந்த ஆணும், பெண்ணும் நாங்கள் பூஜைக்கு தேவையான தேங்காய் பழம் வாங்க மறந்து விட்டோம். எனவே அதே ஆட்டோவில் சென்று வாங்கி வருகிறோம் என்று கூறி விட்டு ஆட்டோவில் சென்றனர். பின்னர் கண்ணம்மாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு தன்னுடைய செல்போனை எடுக்க முயன்றபோது, கழுத்தில் இருந்த 6½ பவுன் தாலிக்கொடியை காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

அப்போதுதான், ஆட்டோவில் தன்னுடன் வந்தவர்கள் நூதன முறையில் தாலிக்கொடியை பறித்து சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து காங்கேயம் போலீசில் கண்ணம்மாள் இதுபற்றி புகார் செய்தார். அதன்பேரில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இதை தொடர்ந்து சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கண்ணம்மாளிடம் தாலிக்கொடியை பறித்த மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காங்கேயம் பஸ்நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர்கள் மதுரை ஆணையூர் அருகே உள்ள செந்தில் நகரை சேர்ந்த நாகேந்திரன் என்பவரின் மகன் கருப்பையா (28), மதுரை பழங்காநத்தம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த முத்தப்பன் என்பவரின் மனைவி வைத்தீஸ்வரி (25) என்பது தெரியவந்தது. அத்துடன், காங்கேயம் ஆயி அம்மன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்ற போது கணவன்-மனைவி போல் நடித்து கண்ணம்மாளிடம் நூதன முறையில் தாலிக்கொடியை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கண்ணம்மாளிடம் பறித்து சென்ற தாலிக்கொடியை மீட்டனர். பின்னர் அவர்கள் இருவரும் காங்கேயம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story