கருங்கல் காண்டிராக்டர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது


கருங்கல் காண்டிராக்டர் கொலை வழக்கு: கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 May 2018 10:15 PM GMT (Updated: 30 May 2018 3:19 PM GMT)

கருங்கல் காண்டிராக்டர் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 46), கட்டிட காண்டிராக்டர். இவருடைய பக்கத்து வீட்டில் வசிப்பவர் அமிர்தராஜ் (வயது 33). இவருக்கும், பிரான்சிஸ் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில், பிரான்சிஸ் மகளிடம் அமிர்தராஜ் தகராறு செய்தார். இதனால் பிரான்சிஸ் மகள் கருங்கல் போலீசில் அமிர்தராஜ் மீது புகார் செய்தார்.

அந்த புகாரை வாபஸ் பெறும்படி அமிர்தராஜ், பிரான்சிஸ் குடும்பத்தினரை மிரட்டி வந்தார். ஆனால் புகாரை வாபஸ் பெற பிரான்சிஸ் மறுத்ததால் கூலிப்படை உதவியுடன் கடந்த மார்ச் மாதம் பிரான்சிஸ் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அப்போது, அதேபகுதியை சேர்ந்த அமிர்தராஜ், அருள், ஸ்டீபன், சுபி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

 மேலும், இச்சம்பவத்தில் கறுக்குப்பனையை சேர்ந்த அஜின் என்ற அஜி (வயது 24), ரீஜின் என்ற ரெஜின் கிறிஸ்டோபர் (23) ஆகிய 2 பேர் கூலிப்படையாக செயல்பட்டது தெரியவந்தது. 2 பேரும் தலைமறைவாகிவிட்டனர்.

2 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்தநிலையில் 2 பேரும் கேரள மாநிலம் திருவல்லாவில் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ மற்றும் போலீசார் கேரளாவுக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த அஜி, ரெஜின் கிறிஸ்டோபர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பின்னர், அவர்களை கருங்கல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கருங்கல் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரும் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.

Next Story