மருந்துக்கு இணையானது மதிப்புமிக்க வார்த்தைகள்


மருந்துக்கு இணையானது மதிப்புமிக்க வார்த்தைகள்
x
தினத்தந்தி 10 Jun 2018 9:02 AM GMT (Updated: 10 Jun 2018 9:02 AM GMT)

நம்பிக்கை தரும் வார்த்தைகளை பயன்படுத்துங்கள். அதற்கு நல்ல சக்தி இருக்கிறது.

உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதலாக பேசும் நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் மருந்துக்கு இணையானவை. மருத்துவ உலகமே வியக்கும் அளவிற்கு உடல் பலவீனமான நிலையில் இருந்தவர்களை அன்பும், ஆறுதலும் மீட்டெடுத்த சம்பவங்கள் உண்டு.

மருத்துவம் கைவிடும் நிலையில் இருந்தவர்களை நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் காப்பாற்றியிருக்கிறது. கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு நம்பிக்கைக்குரிய வார்த்தைகள் கிடைத்துக் கொண்டே இருந்தால் மனதில் நம்பிக்கை ஏற்பட்டு, அது மருந்தைவிட வேகமாக செயல்பட்டு அவர்களிடம் வியத்தகு மாற்றங்களை உருவாக்கி விடும்.

மனதை பலப்படுத்தினால், உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுத்து விடமுடியும். அதனால்தான் பல்வேறு மருத்துவமனைகளில் தினமும் நோயாளிகளை சந்திக்க மனோதத்துவ நிபுணர்களை நியமித்திருக்கிறார்கள். அவர்கள் நோயாளிகளை சந்தித்து நம்பிக்கை தரும் வார்த்தைகளை பேசி, அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறார்கள். அவர்கள் கொடுக்கும் நம்பிக்கையும், டாக்டர்கள் கொடுக்கும் மருந்தும் சேர்ந்து வேலை செய்து அவர்களை விரைவில் இயல்புநிலைக்கு கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.

வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுக்க வேண்டி இருந்தால் அவர்களுக்கு தேவை மருந்து மட்டுமல்ல, அன்பான வார்த்தைகளும்கூட! அப்படி அன்பை பகிர்்ந்து, நம்பிக்கையளித்து, ஒருவருக்கு சக்தியளிப்பதற்கு ‘யூனிவர்சல் ரெமிடி’ என்று பெயர்.

இந்த பிரபஞ்சத்தில் நல்ல சக்திகள் சுழன்றுகொண்டிருக்கும். அந்த நல்ல சக்திகள் நம் நல்ல எண்ணங் களுக்கு கட்டுப்பட்டு நம்மை நோக்கி வரும். நம்மிடம் இருந்து வெளிப்படும் நல்ல வார்த்தைகள் அந்த சக்திகளை பலப்படுத்தும். பிறகு அது செயலாகும். இதுவே பிரபஞ்ச இயக்கம்.

அதனை நாம் செயல்படுத்தி பார்த்தால் நமக்கு நன்மைகள் விளையும். சுற்றி இருப்பவர்கள் பேசும் நல்ல வார்த்தைகள் கேட்பவர்களின் மனதுக்குள் நல்ல எண்ணங்களை தோற்றுவிக்கும். அது மகிழ்ச்சியாக மாறும். அந்த மகிழ்ச்சி மனதுக்குள் நல்ல எண்ண அலைகளை ஏற்படுத்தும். இந்த அலைகள் பிரபஞ்சத்தில் சுழன்றுக் கொண்டிருக்கும் அதேபோன்ற அலைகளை ஈர்க்கும். அது பல மடங்காகும்போது அதற்கென தனி சக்தி பிறக்கும். அந்த சக்தி நம் எண்ணங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, நம்மை வெற்றி கரமான மனிதராக்கும்.

முன்காலத்தில் ரிஷிகள், சித்தர்கள் எல்லோரும் இப்படித்தான் செயல்பட்டார்கள். அதனால் அவர்கள் கூறிய நல்ல வாக்குகள் பலித்தன. இது அவர்களை தெய்வத்திற்கு ஈடாக மதிக்கவைத்தது.

நாம் எப்போதும் மனதை மகிழ்ச்சிப்படுத்தும் நல்ல எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து நல்ல வார்த்தைகளை பேசவேண்டும். பேசினால் ஒவ்வொரு வார்த்தைக்கும் புதிய சக்தி கிடைக்கும்.

எந்த வார்த்தையையும் திரும்பத் திரும்ப சொல்லும்போது அது செயலாகிவிடும். கோவில்களில் இதற்காகத்தான் தொடர்ந்து மந்திரங்கள் சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. மந்திரங்களுக்கும், நல்ல சொற்களுக்கும் ஏழை, பணக்காரன் எந்த வித்தியாசம் இல்லை.

ஏழையின் சொல்லும் அம்பலத்தில் ஏறத்தான் செய்யும். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மகான் ஒளிந்திருக்கிறார். ஆனால் அவர் நல்ல எண்ணங்கள் வாயிலாகத் தான் வெளிப்படுகிறார். அதனால் நீங்கள் நல்ல எண்ணங்களை கொண்டிருந்தால், நீங்களும் ஒரு மகான்தான்!

அதேபோல நாம்பேசும் எதிர்மறை வார்த்தைகளுக்கும் பிரபஞ்சத்திலிருந்து எதிர்மறையான சக்தி கிடைக்கிறது. அவை பலம் பெற்று செயலாகும்போது பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். இந்த இன்னல்களுக்கு எல்லாம் காரணம் எண்ணங்கள்தான்.

ஒருவர் மனதில் தோன்றும் நல்ல எண்ணங்கள் அவரை நல்வழிப் படுத்தும். அவரிடம் இருந்து கெட்ட எண்ணங்கள் தோன்றினால் அதுவே அவருக்கு கேடாய் முடியும். நம் எண்ணங்கள் தான் நம்மை வழிநடத்துகின்றன என்பதை புரிந்து கொண்டால் எல்லோரும் நல்லவர்களாகி விடுவார்கள்.

மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் ஒவ்வொருவரையும் குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பும் முன்பாக அவர்களது குடும்ப உறுப்பினர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கிறார்கள். நோய்வாய்ப்பட்டு உடலளவில் பலவீனமான நிலையில் இருப்பவர்களை எப்படி நடத்த வேண்டும்? அவர்களிடம் எப்படி பேசவேண்டும்? என்பது பற்றி தெளிவாக விளக்குகிறார்கள்.

நோய்க்காக சாப்பிடும் மருந்து மாத்திரைகளை விட ஆறுதலாக பேசும் வார்த்தைகள்தான் அவருடைய உடல் நலனுக்கு பலம் ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை புரியவைக்கிறார்கள்.

நோயாளிகளிடம் வீட்டில் உள்ளவர்கள் எப்படி பழகி, நல்ல வார்த்தைகளை பேசி நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்குகிறார்கள்.

நோயாளிகளிடம் அவருடைய நலம் விரும்பிகள் நடந்து கொள்ளும் முறைதான் அவர்களை விரைந்து குணப்படுத்தும் என்ற யதார்த்த உண்மையை புரியவைக்கிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்க்க தினமும் ஏராளமானவர்கள் செல்கிறார்கள். அவர்கள் எப் படிப்பட்ட நோயின் தாக்கத்தில் சிக்கியிருந்தாலும் அவர் களிடம் நம்பிக்கை தரும் நல்ல வார்த்தைகளை பேசவேண்டும்.

மருத்துவமனை சூழ்நிலை அவர்களை மனரீதியாக பாதிக்க வைத்திருக்கும். அப்போது எதிர்மறை சிந்தனைகள் அவர்களுக்குள் எட்டிப்பார்க்கும். அதனால் அவர்கள் பலவீனமடைந்து சோர்ந்து காணப்படுவார்கள். பார்வையாளர்களின் நம்பிக்கையான வார்த்தைகள் அந்த சோர்வையும், பலவீனத்தையும் போக்குவதாக அமையவேண்டும்.

எப்போதும் நல்ல வார்த்தைகளை பேசுவது ஒரு கலை. இந்த கலை கைவரப் பெற்றவர்கள் சக்தி நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பரவிக்கொண்டே இருக்கும்.

ஆறுதலும்.. தேறுதலும்..


- வெகு நாட்கள் கழித்து ஒருவரை சந்திக்கும்போது, ‘என்ன ஆளே ரொம்ப இழைச்சிப்போயிட்டீங்க.. உங்க உடம்புக்கு ஏதாவது பிரச்சினையா? எதுக்கும் சீக்கிரம் ஒரு நல்ல டாக்டரை பாருங்கள்’ என்பதுபோல் பேசுவது சரியான அணுகுமுறை அல்ல. நலம் விசாரிக்கும்போது அவர் சொல்லும் தகவல்களை மட்டும் கேளுங்கள். தனது உடல்நலம் பற்றி அவர் ஆலோசனை கேட்டால்கூட உங்களிடம் இருந்து நம்பிக்கையான வார்த்தைகளே வரவேண்டும். ‘உங்கள் உடலில் பெரிய அளவில் எந்த பிரச்சினையும் இருக்காது. ஏதாவது பிரச்சினை இருந்தாலும் இப்போது எளிதாக சரிசெய்துவிடலாம். உடல் நிலையை பற்றி நீங்கள் ரொம்ப கவலைப்படவேண்டாம். இப்படிப்பட்ட பாதிப்புகொண்ட பலரை நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் இப்போது பூரண நலத்துடன் வாழ்கிறார்கள்’ என்று நம்பிக்கை கொடுங்கள்.

- வாழ்க்கையில் ஏற்பட்ட கடுமையான தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றிக்கொடி நாட்டிய சிலரது வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். ஏன்என்றால் நீங்கள் சந்திப்பவர்களில் நிறையபேர் தோல்வியால் துவண்டுபோய்தான் இருப்பார்கள். அவர்களுக்கு அந்த சாதனையாளர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான கட்டங்களை எடுத்துக்கூறி, ‘உங்களாலும் அதுபோல் மீண்டு சாதனையாளராக முடியும்’ என்று கூறுங்கள். சோர்ந்து போயிருப்பவர்களை உற்சாகப்படுத்தும் நம்பிக்கை வரிகளையும் அடிக்கடி கூறி உங்களை சார்ந்தவர்களை அவ்வப்போது தூண்டிவிட்டுக்கொண்டே இருங்கள்.

- எல்லோரது வாழ்க்கையிலும் சோகம் உண்டு. உங்களை சார்ந்தவர்களுக்கு ஏதாவது துக்கம் ஏற்பட்டால், அதையே திரும்பத் திரும்ப பேசி அவரை சோகத்தின் உள்ளே மூழ்கவைத்துவிடாதீர்கள். ‘எல்லா துக்கங்களையும் போக்கும் சக்தி காலத்திற்கு உண்டு. எல்லோரும் இதுபோன்ற சோகங்களை கடந்துதான் வந்திருக்கிறார்கள். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கையோடு இருங்கள்’ என்று கூறி அவரை வேறு சிந்தனைகளிலும், செயல்களிலும் ஈடுபடவையுங்கள்.

- நீங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வது வேறு. தேறுதல் சொல்வது வேறு. ஆறுதல் பலராலும் சொல்லமுடியும். தேறுதல் சொல்லத்தான் ஆள் இ்ல்லை. தேறுதல் சொல்ல முதலில் ஆறுதலில் இருந்து மீளவைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட வருக்கு தேறுதல் கூறி, அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதுதான் மிக முக்கியதேவை. தேறுதல் சொல்பவர்களையே பலரும் நினைவில் வைத்திருப்பார்கள். ஒருவரது வாழ்க்கையை ஏற்றத்துக்கு கொண்டுபோகும் தேறுதல் வார்த்தைகளே, மருந்தாகி மனதில் நம்பிக்கையை துளிர்க்கவைக்கிறது.


Next Story