வீட்டிற்குள் இருந்த பீரோவை தூக்கிச்சென்று 13 பவுன் நகை-ரூ.17 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீட்டிற்குள் இருந்த பீரோவை தூக்கிச்சென்று 13 பவுன் நகை-ரூ.17 லட்சம் திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jun 2018 11:00 PM GMT (Updated: 10 Jun 2018 7:50 PM GMT)

காற்றோட்டத்துக்காக மாடியில் தூங்க சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவை தூக்கி சென்று அதில் இருந்த 13 பவுன் தங்க நகை-ரூ.17 லட்சத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் வடக்கு வெள்ளாளத் தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 50). இவர், தனியார் பஸ் டிரைவராகவும், விவசாய கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவி மட்டும் உட்கோட்டை கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் கணவன்-மனைவி இருவரும் வீட்டின் பின்புற கதவை சாத்தி விட்டு உள்புறமாக தாழ்ப்பாள் போட்டனர்.

பின்னர் அவர்கள் முன்பக்க கதவை பூட்டி விட்டு காற்றோட்டத்துக்காக மொட்டை மாடிக்கு சென்று படுத்து தூங்கினர். தூங்கி எழுந்து நேற்று காலை கீழே இறங்கி வந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது நகைகள், பணம் வைக்கப்பட்டிருந்த பீரோவை காணவில்லை. வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவை தூக்கி சென்றிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசாருக்கு ராமு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி தலைமையில் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார் ராமு வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது ராமு வீட்டின் எதிரே சுமார் 200 மீட்டர் தொலைவில் வயல்வெளி பகுதியில் பீரோ திறந்து கிடந்தது தெரியவந்தது.

அங்கு வைத்து பீரோவை உடைத்த மர்ம நபர்கள், அதில் இருந்த 13 பவுன் நகைகள், ரூ.17 லட்சத்தை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்குமாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி விட்டு சென்றார். 

Next Story