சார்மடி மலைப்பாதையில் மண்சரிவு; 17 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது


சார்மடி மலைப்பாதையில் மண்சரிவு; 17 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது
x
தினத்தந்தி 13 Jun 2018 5:34 AM IST (Updated: 13 Jun 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர்ந்து 5-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் சார்மடி மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது.

சிக்கமகளூரு,

மண் சரிவு காரணமாக அச்சாலையில் சுமார் 17 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரநாடு அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

சிக்கமகளூரு மாவட்டத்தில் நேற்று தொடர்ந்து 5-வது நாளாக தொடர்ந்து கனமழை கொட்டியது. சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே, கொப்பா, சிருங்கேரி, என்.ஆர்.புரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடனும், இடி-மின்னலுடனும் கனமழை பெய்ததால் ஏராளமான இடங்கள் வெள்ளக்காடாக மாறின. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே கனமழையால் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தொடர் மழையால் மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே இன்னும் 3 முதல் 4 நாட்களுக்கு சிக்கமகளூரு மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் சிக்கமகளூரு மாவட்டம் ஸ்தம்பித்து உள்ளது.

துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆகிய ஆறுகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கரைபுரண்டு ஓடுகிறது. தொடர் கனமழையால் சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கலசா அருகே ஒரநாடு மலைப் பாதையில் அமைந்துள்ள அன்னபூர்னேஸ்வரி கோவில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் அந்த கோவில் அந்தரத்தில் தொங்குவதுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த கோவிலுக்கு செல்லும் படிகளும் இடிந்து விட்டன. இதன்காரணமாக அந்த கோவிலுக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலா பயணிகளும் அந்த பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மண்சரிவால் கலசாவில் இருந்து ஒரநாடு மலைப்பாதை வழியாக ஹெப்பால் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வொரு வாகனமும் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாற்றுப்பாதை இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதேபோல் பத்ரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆர்ப்பரித்து ஓடுவதால் ஒரநாடு அருகே அமைந்துள்ள தரைப்பாலம் மூழ்கியது. பாலத்திற்கு மேல் சுமார் 3 அடி உயரத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையின் இருபுறமும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. சில வாகனங்கள் பேரள்ளி கிராமம் வழியாக மாற்றுப்பாதையில் செல்கின்றன. ஆனால் அந்த பாதை வனப்பகுதி நிறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பயணிகள் மழையின் காரணமாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

இதேபோல் சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா அருகே மலைப்பாதையில் அமைந்துள்ள சூரியன் கோவில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலை மீது இருந்து மண்சரிந்து கோபுரம் மீது விழுந்ததால், கோவில் இடிந்தது. இதுமட்டுமல்லாமல் சிக்கமகளூரு மாவட்டத்தில் இருந்து மூடிகெரே வழியாக தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு செல்ல முக்கிய சாலையாக விளங்கும் சார்மடி மலைப்பாதையில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவால் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் இருந்து சார்மடி மலைப்பாதை வழியாக வரக்கூடிய அனைத்து வாகனங்களும் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்பகுதியே போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும், கொட்டிகாரா சோதனைச்சாவடியில் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து மாற்றுப்பாதையில் வாகனங்கள் விடப்பட்டன.

சார்மடி மலைப்பாதையில் ஏற்பட்ட மண்சரிவால் பெங்களூருவில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலா, மங்களூரு ஆகிய பகுதிகளுக்கு சென்ற வாகனங்கள் மலைப்பாதையில் சிக்கிக்கொண்டன. அந்த வழியாக பஸ்கள், வேன்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்த பயணிகள் சுமார் 17 மணி நேரம் எங்கும் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர். குறிப்பாக குழந்தைகளும், முதியவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதுகுறித்து அறிந்த சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாதையில் சிக்கிக் கொண்டவர்களுக்கு உதவி செய்தனர். அவர்களுக்கு உணவு, பால், முதியவர்களுக்கு மருந்து-மாத்திரைகள் போன்றவற்றை கொடுத்தனர். குமாரசாமி எம்.எல்.ஏ. வாகனங்களில் சிக்கிக்கொண்ட பயணிகளுக்காக ஒரு லாரியில் உணவுப்பொட்டலங்களை அனுப்பினார்.

இதற்கிடையே வனத்துறையினர், போலீசார், தன்னார்வலர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து மலைப்பாதையில் ஏற்பட்டிருந்த மண்சரிவை சீரமைத்தனர். இதனால் நேற்று பிற்பகல் முதல் சார்மடி மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது. இருப்பினும் தொடர்ந்து அப்பகுதியில் மழை பெய்து வருவதால், மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள்.

மேலும் பல வாகனங்கள் சார்மடி மலைப்பாதையில் அனுமதிக்கப்படாமல் மடிகேரி வழியாக பெங்களூருவுக்கு மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகின்றன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற்பயிர்கள், காபிச்செடிகள் நாசமடைந்து வருகின்றன. வைக்கோல் போர்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story