மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி மாணவ–மாணவிகளுடன் பொது மக்கள் சாலை மறியல் + "||" + People stroll the road with the students

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி மாணவ–மாணவிகளுடன் பொது மக்கள் சாலை மறியல்

அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி மாணவ–மாணவிகளுடன் பொது மக்கள் சாலை மறியல்
அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி பள்ளி மாணவ–மாணவிகளுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூரில் உள்ள மாநகராட்சி உயர் நிலைப்பள்ளியில் 1–ம் வகுப்பு முதல் 10–ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 550 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தொடக்கப்பள்ளியாக இருந்து, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் போதிய வகுப்பு அறைகளும், அடிப்படை வசதிகளும் இல்லாமல் தொடக்கப்பள்ளி கட்டிடத்திலேயே உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2015–ம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் ரூ.1.62 கோடி நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றினார்.

ஆனால் இதுவரையிலும் அரசு பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் உள்பட போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி எர்ணாவூர் குடியிருப்போர் சங்க தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. நாராயணன், செயலாளர் சசிதரன், பொருளாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை பள்ளி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தில் மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் எர்ணாவூர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்ட மாணவர்கள், தங்கள் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டித்தருவதோடு, தாங்கள் 11–ம், 12–ம் வகுப்புக்கு நெடுந்தூரம் செல்ல வேண்டி உள்ளதால் இந்த பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி, இந்த பகுதியிலேயே மேல்நிலை பள்ளிக்கான கட்டிடத்தையும் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதன் காரணமாக கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த எண்ணூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர்.