தேர்தலில் தோற்றதற்கு காரணம் என்ன? - மைசூரு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சித்தராமையா ஆலோசனை


தேர்தலில் தோற்றதற்கு காரணம் என்ன? - மைசூரு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சித்தராமையா ஆலோசனை
x
தினத்தந்தி 14 Jun 2018 4:43 AM IST (Updated: 14 Jun 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

தேர்தலில் தோற்றதற்கான காரணம் என்ன? என்பது குறித்து மைசூரு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

மைசூரு,

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, நேற்று முன்தினம் மைசூருவுக்கு வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மைசூருவிலேயே தங்கினார். நேற்று மைசூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் அவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் மைசூரு மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளர்கள், காங்கிரஸ் மாவட்ட, நகர, கிளைக்கழக நிர்வாகிகள், பிளாக் காங்கிரஸ் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சித்தராமையா பேசும்போது கூறியதாவது:-

மைசூரு மாவட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 8 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளை கைப்பற்றி இருந்தது. ஆனால் இம்முறை(2018) நடந்த தேர்தலில் இந்த 2 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 5 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றி இருக்கிறது. இது வேதனை அளிக்கிறது.

இதற்கு என்ன காரணம்?. ஏன் காங்கிரஸ் கட்சி தன் கைவசம் இருந்த தொகுதிகளை கோட்டை விட்டது. கட்சி நிர்வாகிகள் சரியாக வேலை செய்யவில்லையா?. காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லையா? அல்லது நலத்திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மக்களிடம் எடுத்துக்கூற வில்லையா?. எந்த இடத்தில் தவறு நடந்தது என்று கண்டறியப்பட வேண்டும்.

அடுத்த சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் அடுத்த ஆண்டு(2019) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி அடைவதற்கு இப்போதிருந்தே தொண்டர்களும், நிர்வாகிகளும் பாடுபட வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story