அரசு பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் வகுப்பறை கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


அரசு பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் வகுப்பறை கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Jun 2018 4:30 AM IST (Updated: 15 Jun 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே அரசு பள்ளிக்கூடத்துக்கு கூடுதல் வகுப்பறை கட்டக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 1 மணி அளவில் தவுட்டுப்பாளையம்-கரட்டுப்பாளையம் ரோட்டில் ஒன்று கூடினார்கள். பின்னர் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் கூறும்போது, ‘தவுட்டுப்பாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் மட்டும் தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து பள்ளிக் கூடத்துக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

ஆனால் கட்டிடம் திறக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் இந்த கல்வியாண்டு முதல் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அங்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பள்ளிக்கூடத்துக்கு மொத்தம் 370 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களுக்கு வகுப்பறைகள் போதுமானதாக இல்லை. இடப்பற்றாக்குறை நிலவுகிறது. ஒரு சில வகுப்பறைகள் பழுதடைந்தும் காணப்படுகிறது.

கட்டிட பணி இன்னும் முடிவடையாமல் உள்ளது. சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக வகுப்பறைகள் முன்பு ஜல்லி கற்களை குவித்து வைத்துள்ளார்கள். இதனால் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள்.

பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டு மைதானமும் இல்லை. எனவே மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் பழுதடைந்த வகுப்பறைகளையும் சரிசெய்ய வேண்டும்.’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘விரைவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு 2.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சாலை மறியலால் தவுட்டுப்பாளையம்-கரட்டுப்பாளையம் ரோட்டில் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story