18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி


18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் திருநாவுக்கரசர் பேட்டி
x
தினத்தந்தி 14 Jun 2018 11:00 PM GMT (Updated: 14 Jun 2018 9:40 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதி விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி தலைவர்கள் சந்திப்பு கூட்டம் அரியலூரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். அரியலூர் நகர தலைவர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நகர, வட்டார, கிராம பூத் கமிட்டி தலைவர்கள், கட்சி யின் அனைத்து அணி பொறுப்பாளர்களை சந்தித்து தேர்தலின்போது எப்படி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்றும், உறுப்பினர்கள் சேர்ப்பது பற்றியும் ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர்நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. தலைமை நீதிபதி தகுதி நீக்கம் சரி என்கிறார். மற்றொரு நீதிபதி முற்றிலும் தவறு என்கிறார். தமிழக சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறிய ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் செய்தது பற்றி சபாநாயகர் உத்தரவில் தலையிட முடியாது என்று ஒரு தீர்ப்பும், புதுச்சேரி சட்டமன்றத்தில் சபாநாயகர் செய்தது தவறு என்றும், தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு முரணாகவும் உள்ளது.

ஒரே நீதிமன்றத்தில் சட்டமன்றம் பற்றிய வழக்கில் 3 தீர்ப்புகளும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது. அரசுக்கு எதிராக ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை இல்லை. முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்று கூறிய 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர். 3-வது நீதிபதி நியமிக்கப்பட்டு, இந்த வழக்கை வருட கணக்கில் கிடப்பில் போடாமல் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும். இந்திய குடிமக்கள் அனைவரும் நம்புவது நீதிமன்றத்தைத்தான். நீதிமன்றம் மீது மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

முடிவில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். 

Next Story