பெங்களூரு மாநகராட்சி இடைத்தேர்தல் பின்னிப்பேட்டை வார்டில் ஜனதா தளம்(எஸ்) வெற்றி


பெங்களூரு மாநகராட்சி இடைத்தேர்தல் பின்னிப்பேட்டை வார்டில் ஜனதா தளம்(எஸ்) வெற்றி
x
தினத்தந்தி 21 Jun 2018 4:15 AM IST (Updated: 21 Jun 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு மாநகராட்சியில் பின்னிப்பேட்டை வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெ

பெங்களூரு, 

பெங்களூரு மாநகராட்சியில் பின்னிப்பேட்டை வார்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வெற்றி பெற்றது.

பின்னிப்பேட்டையில் இடைத்தேர்தல்

பெங்களூரு மாநகராட்சியில் பின்னிப்பேட்டை வார்டு கவுன்சிலராக இருந்தவர் மகாதேவம்மா. அவர் கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக உள்ள அந்த பின்னிப்பேட்டை வார்டுக்கு கடந்த 18–ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவித்யா சசிக்குமார், ஜனதா தளம்(எஸ்) சார்பில் ஐஸ்வர்யா, பா.ஜனதா சார்பில் சாமுண்டேஸ்வரி ஆகியோர் போட்டியிட்டு இருந்தனர். அந்த வார்டு பொது பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த வார்டில் அரசியல் கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

ஓட்டு எண்ணிக்கை

இந்த நிலையில் அந்த வார்டில் கடந்த 18–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சுமார் 43 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இதில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பெங்களூரு சேஷாத்திரி ரோட்டில் உள்ள மனை அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இருந்தன. 20–ந் தேதி (அதாவது நேற்று) ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த கல்லூரிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அறிவித்தப்படி மனை அறிவியல் கல்லூரியில் ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 6 சுற்றுகள் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர் ஐஸ்வர்யா முன்னிலை பெற்று வந்தார். இறுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் ஐஸ்வர்யா 7,188 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஓட்டு வித்தியாசம் 1,939 ஆகும். அவருக்கு அடுத்து வந்த காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீவித்யா சசிக்குமார் 5,249 ஓட்டுகள் பெற்று தோல்வி அடைந்தார். பா.ஜனதா வேட்பாளர் சாமுண்டேஸ்வரி 2,455 ஓட்டுகள் பெற்று 3–வது இடத்தை பிடித்தார். நோட்டாவுக்கு 159 ஓட்டுகள் கிடைத்தன.

ஆனந்த கண்ணீர்

மகாதேவம்மாவின் கணவர் நாகராஜ் காங்கிரசில் இருந்தவர். காங்கிரசில் அவரது மகளுக்கு டிக்கெட் வழங்குமாறு அவர் கேட்டதாகவும், ஆனால் அவருக்கு டிக்கெட் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கட்சியில் இருந்து விலகி நாகராஜ் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். இந்த நிலையில் பின்னிப்பேட்டை வார்டில் நாகராஜ்–மகாதேவம்மா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

வெற்றி பெற்ற ஐஸ்வர்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, தனது தாய் என்னுடன் இப்போதும் உள்ளார். இதனால் நான் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன் என்று கூறி ஆனந்த கண்ணீர் விட்டார்.


Next Story