மாவட்ட செய்திகள்

சோலையார் அணை நிரம்பி வழிகிறது: வால்பாறையில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் + "||" + The Solar Dam is overflowing: Monsoon intensity in Valparai

சோலையார் அணை நிரம்பி வழிகிறது: வால்பாறையில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம்

சோலையார் அணை நிரம்பி வழிகிறது: வால்பாறையில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம்
வால்பாறையில் மீண்டும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வால்பாறை,

வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. இந்த மழை ஜூன் மாதம் முழுவதும் கனமழையாக பெய்தது.

இதனால் இந்த மாதத்தில் 1-ந்தேதி சோலையார்அணை தனது முழு கொள்ளளவான 160 அடியை எட்டியது. இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக சற்று மழை குறைந்து காணப்பட்டது.இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து பெய்துவருகிறது.


இதனால் சோலையார்அணை தனது முழுகொள்ளளவை தாண்டி 162 அடியை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் வால்பாறை நகர் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஆற்று பகுதியில் தண்ணீர் வீடுகளை தொட்டுக் கொண்டு சென்றுவருகிறது.

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவருகிறது.

நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்ததால் கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதே போல கடந்த ஜூன் மாதம் 12 மற்றும் 13-ந் தேதிகளில் கனமழை பெய்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கி உள்ளதால் சோலையாறு அணை நிரம்பி வழிந்து, சேடல்பாதை வழியாக கூடுதலாக தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு சென்றுவருகிறது.

வால்பாறை பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் சோலையார்அணையில் 98 மி.மீ.மழையும், வால்பாறையில் 78 மி.மீ.மழையும், சின்னக்கல்லாரில் 110 மி.மீ.மழையும், நீராரில் 94 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

சோலையார்அணைக்கு வினாடிக்கு 2282 கனஅடித்தண்ணீர் வந்து வந்துகொண்டிருக்கிறது. சோலையார் அணையிலிருந்து சேடல் பாதை வழியாக 1212 கனஅடித்தண்ணீரும், பரம்பிக்குளம் அணைக்கு சென்று கொண்டிருக்கிறது.

சோலையார் மின்நிலையம் -2 இயக்கப்பட்டு 413.66 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டுவருகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...