மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி ஒருவர் கைது + "||" + 11 lakh frauds arrested from customers

வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி ஒருவர் கைது

வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி ஒருவர் கைது
தா.பேட்டை அருகே வங்கியில் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தா.பேட்டை,

திருச்சி மாவட்டம், தா.பேட்டையை அடுத்த தும்பலம் கிராமத்தில் கனரா வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளையில் தும்பலம் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கணக்குகள் தொடங்கி வரவு, செலவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சிலரது கணக்குகளில் இருந்து அவர்களுக்கு தெரியாமலேயே லட்சக்கணக்கில் பணம் எடுக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.


தினக்கூலி அடிப்படையில் வங்கியில் உதவியாளராக பணிபுரிந்து வரும் அதே ஊரைச் சேர்ந்த கருணாநிதி (வயது34) என்பவர் தான் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் தும்பலத்தை சேர்ந்த சித்ரா கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரம், மணி கணக்கில் இருந்து ரூ.90 ஆயிரம், சூரம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் கணக்கில் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரம், சண்முகம் கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம், சிட்டிலரை சரவணன் கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம், அரவன் கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் உள்பட பலரது கணக்கில் இருந்து போலியாக கையெழுத்தை போட்டு பணத்தை எடுத்துள்ளார்.

இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாடிக்கையாளர்கள் நேற்றுமுன்தினம் வங்கியை முற்றுகையிட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மேலும், வாடிக்கையாளர்களது வங்கி கணக்குளை ஆய்வு செய்து மோசடி செய்து எடுக்கப்பட்ட பணத்தை உடனடியாக திருப்பி வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் சமயசங்கரி முசிறி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் வங்கியில் தினக்கூலியாக வேலை பார்க்கும் கருணாநிதி வாடிக்கையாளர்களை போன்று கையெழுத்து போட்டு போலி ஆவணங்களை பயன்படுத்தி ரூ.11 லட்சம் வரை மோசடி செய்து எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முசிறி இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் ஆகியோர் வழக்குபதிந்து கருணாநிதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.