கூடலூர்-மைசூரு சாலையில் ஓடிய காட்டுயானையால் பரபரப்பு
வனத்துறையினர் உறுதி அளித்த பின்னரும் கூடலுார்- மைசூரு சாலையில் காலை நேரத்தில் காட்டு யானை ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவு வருகின்றன. அப்போது விவசாய பயிர்களை தின்று சேதப் படுத்துகின்றன. இதை தடுக்க முயலும் மக்களை தாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியில் போதிய பசுந்தீவனங்கள் கிடைக்காததால் ஊருக்குள் காட்டு யானைகள் வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து முதுமலை வழியாக மைசூருக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் கூடலூரும், முதுமலை புலிகள் காப்பகமும் இணையும் எல்லையில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. முதுமலை வனத்தில் உள்ள காட்டு யானைகள் தினமும் வெளியேறி பஜாருக்குள் நுழைகின்றன. இந்த நேரத்தில் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் பயத்தில் ஓடி உயிர் பிழைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் ஓடி வரும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் வீடுகளையும் இரவில் முற்றுகையிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு குனில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டை காட்டு யானை சேதப்படுத்தியது. பின்னர் காலை 7 மணிக்கு தொரப்பள்ளிக்குள் காட்டு யானை நுழைந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்களை காட்டு யானை துரத்தியது. இதில் அப்துல் ரகுமான் என்பவர் உள்பட 3 பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். மேலும் பொதுமக்களின் கூச்சலை தொடர்ந்து காட்டு யானை அங்கிருந்து ஓடி முதுமலை வனத்துக்குள் சென்றது.
இதைத்தொடர்ந்து ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை தடுக்கக்கோரி கூடலூர்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சுமார் 1.30 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் முதுமலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக கண்காணிப்பை தீவிரப்படுத்த உள்ளதாக உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு காட்டு யானை ஒன்று தொரப்பள்ளி பஜாருக்குள் நுழைந்தது. இதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை பிளிறியவாறு ஓடி வந்தது. இதனால் டிரைவர்கள் தங்களது வாகனங்களை வேகமாக இயக்கி கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த பரபரப்பிலும் சிலர் தங்களது செல்போன்களில் படம் எடுத்தனர்.
காட்டு யானை தந்தங்கள் உடையது என்பதால் வாகனங்களை தாக்கி விடும் அபாயம் உள்ளது. இதனால் எந்த பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஓடி வருமோ என்ற பீதி அப்பகுதிமக்களிடம் தொடர்ந்து நிலவுகிறது. பொதுமக்களின் போராட்டத்தின் போது வனத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தாலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்காததால் காட்டு யானைகள் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பலாப்பழங்களை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வருகின்றன. இதனால் வனத்தில் பலாப்பழங்கள் கிடைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் வனத்துறையினர் ஆக்கபூர்வமான திட்டங்களை எதுவும் செய்வது இல்லை. கோடை காலத்தில் காட்டு யானைகளின் தாகத்தை தணிக்க குட்டை அமைத்து வனத்துறையினர் லாரி மூலம் தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
இதேபோல் பலாப்பழ சீசன் காலத்தில் விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து பலாப்பழங்களை வனத்தில் வைப்பதால் காட்டு யானைகள் விரும்பி சாப்பிடும். தான் வசிக்கும் இடத்தில் பலாப்பழம் கிடைப்பதால் ஊருக்குள் காட்டு யானைகள் வருவது குறையும். இவ்வாறு அவர்கள் யோசனை தெரிவித் துள்ளனர்.
Related Tags :
Next Story