திருச்சியில் ரெயில் வரும் போது தண்டவாளத்தில் இருந்து ஓடிய 3 எருமை மாடுகள் கால்வாயில் தவறி விழுந்தன


திருச்சியில் ரெயில் வரும் போது தண்டவாளத்தில் இருந்து ஓடிய 3 எருமை மாடுகள் கால்வாயில் தவறி விழுந்தன
x
தினத்தந்தி 19 July 2018 4:15 AM IST (Updated: 19 July 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரெயில் வரும் போது தண்டவாளத்தில் இருந்து ஓடிய 3 எருமை மாடுகள் கால்வாயில் தவறி விழுந்தன. தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

திருச்சி,

திருச்சி கோட்டை ரெயில் நிலையம் அருகே நேற்று காலை எருமை மாடுகள் கும்பலாக தண்டவாளம் அருகே புற்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. ஓரிரு மாடுகள் தண்டவாளத்தின் நடுப்பகுதியில் நின்றன. அந்த நேரத்தில் கரூரில் இருந்து திருச்சிக்கு ரெயில் ஒன்று வந்தது. தண்டவாளத்தில் எருமை மாடுகள் நிற்பதை கண்ட என்ஜின் டிரைவர் ரெயில் ஹாரனை அடித்தார். அந்த சத்தத்தில் எருமை மாடுகள் தண்டவாளத்தில் இருந்து ஓடத்தொடங்கின.

அப்போது 3 எருமை மாடுகள் தண்டவாளத்தின் அருகில் இருந்த கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்தன. இதில் ஒரு மாடு சினைமாடாகும். கால்வாய் சிறிய அளவில் இருந்ததால் உடல் அதனுள் சிக்கி எழுந்து வெளியே வர முடியாமல் மாடுகள் தவித்தன. மேலும் எருமை மாடுகள் சத்தம் எழுப்பின.

இந்த நிலையில் கால்வாயில் எருமை மாடுகள் விழுந்து தவிப்பதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் விரைந்து வந்தனர். மேலும் கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு அலுவலர் தனபால் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மோகன்ராஜ், மைக்கேல், சதீஷ்குமார் உள்ளிட்ட வீரர்கள் விரைந்து சென்றனர். கால்வாயில் சிக்கி தவித்த எருமை மாடுகளை ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி ஒவ்வொன்றாக உயிருடன் பத்திரமாக மீட்டனர்.

3 எருமை மாடுகளுக்கும் உடலில் லேசான சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டிருந்தன. மாடுகள் உயிருடன் மீட்கப்பட்டதால் அங்கிருந்த பொதுமக்களும், மாட்டின் உரிமையாளரும் நிம்மதி அடைந்தனர். கால்வாயில் விழுந்த மாடுகள் மீட்கப்படுவதை பார்வையிட பொதுமக்கள் கூடியதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story