செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 19 July 2018 10:56 PM GMT (Updated: 19 July 2018 10:56 PM GMT)

ரெயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு,

புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் பயணிகள் ரெயில் காலை மற்றும் மாலை வேளைகளில் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் வெகு நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக இயக்கப்படுகிறது. இதற்கு இடையில் சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதன் காரணமாக அந்த ரெயிலில் வேலைக்கு வரக்கூடியவர்களும், பள்ளி, கல்லூரி செல்லக்கூடியவர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். நேற்று செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் காலை 8.10- க்கு வர வேண்டிய ரெயில் 8.40-க்கு வந்தது. பின்னர் அந்த ரெயில் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்த ரெயிலில் இருந்த பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த ரெயில் பயணிகள் 500-க்கும் மேற்பட்டோர் அந்த ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து அங்கு வந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், ரெயில்நிலைய மேலாளர் சுரேஷ்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக ½ மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story